கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குண்டுவெடிப்பு- துண்டாடப்படும் ஒற்றுமை

சென்னையில் குண்டுவெடிப்பு......ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக் இருந்தாலும் அதன் செய்தியாளரை மூச்சு விடாமல் பதட்டமாக பேச விட்டு உங்களையும் அதன் ஓட்டத்தில் இணைத்திருப்பர்.அந்த பதட்டத்தை அது தனக்கு கூலி கொடுக்கும் கட்சிகளுக்கோ இல்லை அது சார்ந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ குற்றவாளியாக முன்னிறுத்தும்.அந்த குற்றவாளிகள்தான் நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு.

புதியதலைமுறையில் குண்டு வெடிப்பு என்று முக்கிய செய்தி ஓட செய்தியாளர் இது குண்டுவெடிப்புதானா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் என கூறுகிறார்.பரவாயில்லை கண்முன் நடந்ததுதானே விடுங்க.அதனை தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையை தகர்க்க திட்டமிடப்பட்டது குரிப்பிடத்தக்கதுன்னு முத்தாய்ப்பாக தமது எதிராளியை குற்றவாளியாக நிறுத்துகிறது..

ஒரு குண்டுவெடிப்பிற்கு பின் எந்த அடிப்படையில் இவர்களாக தீர்மானிக்கிறார்கள் என தெரியவில்லை.இப்படியான சூழ்நிலையில் காவல்துறை பல தீவிர ஆய்வுகளுக்கு பிறகே தமது விசாரணையின் கோணத்தை ஆரம்பிக்கும்.

வெடிகுண்டின் மூலப்பொருட்கள் என்ன? அது அதிகமாக கிடைக்குமிடம் எது? அதன் விற்பனையில் யார்? யார்? இதற்கு முன் இப்படியான மூலப்பொருட்கள் அடங்கிய குண்டு வெடிப்ப்பு யார் செய்தது? எங்கு?அவர்களுக்கு இங்கு ஆதரவு நிலை எப்படி?

குண்டு வெடிக்கப்படும் விதம் வேறு சம்பவங்களோடு ஒத்து வருகிறதா? அதில் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புக்கு இங்கு வாய்ப்புள்ளதா? அனுதாபம் உண்டா? நாள் ,கிழமை என பல விடயங்கள் ஆராயப்படும்.

குண்டு வெடிக்க வைக்கப்படும் விதம் கொண்டும் விசாரணை அவசியப்படும்.ரிமோட் எனில் ஆள் அந்த பகுதியில்தான் இருந்துள்ளான்.வேறு முறைகள் எனில் அந்த குண்டு எங்கு பொருத்தப்பட்டது? அந்தப்பகுதிகளை குறித்த விசாரணை...

குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள சமூக பிரச்சனைகள்,அதன் தீவிரம் என்ன?
இப்படியாக இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் அதற்கு  முன்னேயே ஊடகங்கள் தமது எதிரியை இல்லை எவரையாவது குற்றவாளியாக்கி கொலை செய்ய துடிப்பதுதான் வேதனையே.

இதனைப்போன்ற தொடர் செய்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தல் மூலம் மிகப்பெரும் நஞ்சை விதைத்து வருவது புரிகிறதா? நெல்லை என்பதால் எனது தம்பி மட்டும் ஒரு ஹோட்டலில் அருவா கத்தி இருக்கிறதா என சோதிக்கப்பட்டபோது கூனி நின்றான்.அதை இஸ்லாமியர்களுக்கு பொருத்தி பார்க்கும்போது உண்மையை புரிந்தும் கொண்டான்.

திருநெல்வேலியில் கொலை நடந்தது என்பதால் நானும் கொலைகாரனா?அங்கு சாதி கலவரம் நடந்தால் நானும் சாதி வெறி பிடித்தவனா? இல்லை மத்த ஊரில் கொலைகள் நடக்கலியா? மத்த ஊர்களில் சாதி வெறியே இல்லியா?அனைத்தும் அனைத்திலும் உள்ளது.ஆனால் ஹரி காட்டியதும் விதைத்ததும் நெல்லையாச்சே....

இதனை இஸ்லாமியர்களுக்கும் பொருத்தி பாருங்கள்.உங்களோடு பணிபுரியும் இஸ்லாமியர்,இங்கு பதிவெழுதும் இஸ்லாமிய பதிவர்கள்,உங்களோடு பள்ளியில் படித்த இஸ்லாமியர் இவர்கள் வெடிகுண்டுகளோடு சுற்றுகிறார்களா என்ன? என்னோடு படித்த சாகுல் ஹமீது டீக்கடையில்தான் வேலை பார்க்கிறான்.அவனையும் ஸ்லிப்பர் செல் என்று வக்கிர எண்ணத்தின் நவீன பதிப்பான துப்பாக்கியில்  முருகதாஸ் எச்சரிக்கை செய்கிறார்.இயல்பான ஒருவனின் வாழ்வை உடைத்துப்போட்டு அவனை தீவிரவாதியாகவே மாற்றி விடுதல் சரிதானா?

மல்டிப்ளக்ஸ் மாலில் ஆயிரம் கண்கள் தையலிடப்பட்ட செருப்பையே உற்று நோக்குவதை போல கூனி நழுவி செல்லும் நிலையில் நம்மோடு உடன் வாழும் ,நம்மைப்போலவே அண்ணாச்சி கடையில தேங்காய் சில்லு கடன் வாங்கி துவையலும் பழைய சாதமுமாகத்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் பல இஸ்லாமியர்கள்..எங்கிருந்து வந்தது வெறுப்பு?

பயணங்களில்,தங்கும் விடுதிகளில்,கல்லூரிகளில்,வேலை பார்க்குமிடத்தில் என ஒவ்வொரு இடத்திலும் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை சந்தேகிக்க தூண்டியது அரசியலன்றி வேறென்ன?

சக மனிதனை தனிமைப்படுத்தும் இந்த செயலை அப்படியே ஏற்றுக்கொண்டு சமூக வலைதளங்களில் இணைந்து கொண்டு  சமூகத்தை உடைத்து போடுகிறோம் நாம்.

சமீபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் பிணத்தில் பார்ப்பனனை கண்டு பிடித்த மேதாவித்தனத்திற்கும் வக்கிரத்திற்கும்  சற்றும் குறைவில்லாதது இஸ்லாமியனை தீவிரவாதியாக சித்தரித்து சிரிக்கும் வக்கிரம்.

ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் பிழைத்து வாழும் ஒரு இஸ்லாமியன் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு கொண்டிருக்கிறான்.குஜராத் கொலைவெறியில் ஆவேசமாக வாளேந்திய அசோக் மோசசி என்பவர் இன்னும் அசோக் மோசசியாகத்தான்  (மோசசி-செருப்பு தைப்பவர்) இருக்கிறார். தூண்டி விட்ட அரசியல்வாதிகள் மந்திரிகளானார்கள்.பிரதமராக வரும் வாய்ப்பு  வரை முன்னேறுகிறார்கள் .ஆனால் மோசசி?இன்னும் செருப்புதான் தைத்து வருகிறார்.

என்னால் உறுதியாக சொல்லமுடியும்...ஒவ்வொரு இந்தியர்களிடத்தும் இந்துவாக்கி இஸ்லாமியனை எதிரியாக்கி இந்துக்களை ஒன்றுபடுத்துவதாக அரசியல் லாபம் பார்ப்பதுதான் கட்சிகளின் திட்டமிடப்பட்ட ஒற்றுமை உடைப்பு பரப்புரைகளும்  ,செயல்பாடுகளும் .

ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் பணம் கிடைக்கலாம்..நமக்கு இழப்பில்லையா?நாஞ்சில் மனோவின்  மூக்கு துடைத்துவிட்டு தோசை ஊட்டிய முஸ்லிம் அண்ணாச்சியை  கடைசி காலத்தில் தனித்து செல்ல விரட்டியதை தவிர வேறென்ன கிழித்தது இந்த மதப்பற்று? வாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாகத்தான் விளையாடவும் படிக்கவும் பழக்கியிருந்தனர்.உங்கள் பிள்ளைகளை எப்படி அனுமதிக்க போகிறீர்கள்?

எண்ணற்ற சந்தேகக்கைதிகளாக வாழ்வை தொலைத்து கிடக்கும் அப்பாவிகளுக்கும் நிமிர்ந்து உரிமை கொண்டாடிய ஊரில் செய்யாத தவறுக்கு வெட்கி குனிந்து செல்லும் பாசக்கார அண்ணாச்சிகளுக்கும் இந்தப்பதிவு அர்ப்பணம்.
நன்றி:தம்பி

0 கருத்துகள்: