கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அரசியல் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின் கவனத்திற்கு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்திருப்பெயரால்

நடைபெறயிருக்கின்ற    நாடாளுமன்ற   தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்…

வெளிநாட்டு இந்தியர்கள் என்போர் இருவகைபடுவர். ஒருவர் குடும்பம் குட்டிகளோடு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்கி, ஒரு தலைமுறைக்குப்பின் இந்திய வம்சாவழியினர் என்ற அழைக்கப்படுபவர்கள். இன்னொரு வகையினரோ சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாய் எந்நேரமும் இந்தியாவுக்குள் திரும்பி வருவோர், சுருக்கமாக சொல்வதென்றால் வளைகுடாவாசியினர். மிகச்சிலரைத் தவிர வளைகுடா வாழ்க்கையை யாரும் விரும்பி ஏற்கவில்லை அதிலும் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரமின்மை, மேற்படிப்பறிவு மறுத்தல், படித்தாலும் அரசு வேலை மறுத்தல், வெகுசிலருக்கு விட்டில்பூச்சி மோகம் என வலிய இந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்கள்.

எங்களில் மிகச்சாதாரண தொழிலாளியும் உண்டு, அரிய வாய்ப்பால் அறிவையும் உழைப்பையும் வெளிநாட்டினருக்காக வழங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலையோரும் உண்டு, அதாவது இந்தியா பயன்படுத்த தவறிய செல்வங்கள் நாங்கள். மேலும் நாங்கள் சம்பளத்திற்கு மேல் இந்திய அரசு ஊழியர்கள் போல கிம்பளத்தை கனவிலும் காண முடியாதவர்கள். எந்த நேரமும் சவூதியின் ‘நிதாகத்’ போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட இருப்பவர்கள், இவையல்லாமல் ஈராக் குவைத்தை ஆக்கிரத்தபோது உலகம் கண்டதே ஓர் காட்சி! பாலைவெளிகளில் உயிரை பிடித்துக் கொண்டு ஒடிவந்தோமே அதைபோன்ற நிலையை இன்னொரு முறை சந்திக்க மாட்டோம் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லாதவர்கள், இவற்றிற்கெல்லாம் மேல் எத்தனை கோடியை நீங்கள் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத, வெளிநாட்டில் தனிமையில் தொலைந்த எங்களின் இளமை. அதேவேளை எங்களுக்கு வாழ்க்கைபட்டதற்கு தண்டனையாய் எங்கள் மனைவிமார்களோ கணவனிருந்தும் விதவைகள் போல் வாழும் ஒர் அவல வாழ்க்கை, போனில் மட்டுமே பொங்கும் அப்பன் பிள்ளை பாசம்.

இத்தனை தியாகத்திற்கு இடையே தவறாமல் நாங்கள் எங்கள் தேசத்திற்கு ஈட்டித் தரும் அந்நிய செலாவணி எனும் பெரும் பொருளாதாரம் ஆனால் கைமாறாக???

1. தமிழக விமான நிலையங்களில் குறிப்பாக, வளர வேண்டிய மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கினால் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் திருடர்களாய் மட்டுமே தெரிகிறோம், நாய்கள் கடித்துக் குதறுவதுபோல் எங்கள் பொருட்களை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். வீட்டுத்தேவைக்கு கொண்டு வரும் பொருட்களுக்குத் தான் எத்தனை சோதனைகள்?, கட்டுப்பாடுகள்? இதை தடுத்து நிறுத்தப்போவது யார்?

2.திருவனந்தபுரத்திற்கு வரும் தமிழக விமான பயணிகளை குதறும் கஸ்டம்ஸ், மலையாளிகளை மட்டும் மனிதர்களாய் மதிக்கின்றது. இந்த இன மாச்சரியங்களை களைந்து அனைவரையும் இந்தியர்களாக நடத்த உழைக்கப்போவது யார்?

3.அபுதாபியில் இருந்து திருச்சிக்கும் சென்னைக்கு மிக லாபத்துடனும், முழுமையான பயணிகளுடனும் இயக்கப்பட்டுவந்தஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்கள் பல, மலேசிய விமானத்திற்கு முன்பே மர்மமாய் காணாமல் போய்விட்டன,அவைகளை இன்றுவரை மீட்டுத்தரவோ, பேசவோ ஆளில்லை. இனியாவது எங்களுக்காக மீண்டும் இயக்கிட பாடுபடுவீர்களா?

4.துபையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்போது ஒவ்வொன்றாய் மாயமாக தொடங்கியுள்ளது. இவை முழுமையாய் மறைந்து தனியார் விமானங்களும் அண்டை நாட்டு விமானங்களும் அதிக பயண கட்டணத்துடன் எங்களை அச்சுறுத்துமுன் தடுத்து நிறுத்தப்போவது யார்?

5.திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பட்ஜெட் கட்டண தனியார் மற்றும் அரசு விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்தும் திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களை இணைத்து நேரடி பட்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமான சேவைகளை துவங்கலாமே, இத்திட்டத்திற்கு மணி கட்டப்போவது யாரோ?

6.சொந்த பந்தங்களை காண வருடத்திற்கு ஒரு மாதமோ அல்லது இரு வருடத்திற்கு இரு மாதமோ விடுமுறையை பிச்சையாய் பெற்று வரும் நாங்கள் முன்பெல்லாம் அனைத்து நிறுவன விமானத்திலும் 40 கிலோ பயண பொதியை (+Cabin Baggage) கொண்டு வர அனுமதிக்கப் பெற்றிருந்தோம். அதிக பொதிக்கு ஆசைப்பட்டே உருப்படாத நிர்வாகம், குறித்த நேர புறப்பாடு உத்திரவாதமில்லாத சர்வீஸ் என தெரிந்தும் ஏர் இந்தியா (எக்ஸ்பிரஸ் அல்ல) விமானத்தில் சென்னைக்கும், இதர நகரங்களுக்கும் பயணித்தோம் இப்போது அதிலும் கை வைத்து 10 கிலோவை குறைத்து விட்டார்கள், 40 கிலோ பொதியை (+Cabin Baggage) மீண்டும் அனுமதித்தால் நாங்களும் பயன்பெறுவோம் அதன் மூலம் தொடர் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவுக்கும் வருமானம் தானே? இந்த உண்மையை விமானத்துறையிடம் எங்களுக்காக யார் எடுத்துச் சொல்ல போகிறீர்கள்?

7.வளைகுடா இந்திய தொழிலாளிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் தான் பணிபுரியும் கம்பெனியுடன் ஏற்படத்தான் செய்கின்றன ஆனால் அண்டை நாடான இலங்கை தூதரகத்திற்கும், தன் பிரஜைகளின் உரிமைகளுக்காக எந்நேரமும் வரிந்து கட்டும் பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கும் இருக்கும் அக்கரையில் நம் தூதரகத்தின் அக்கறை எத்தனை சதவிகிதம் என சொல்ல முடியுமா? மலையாளிகளின் வெளியுறவுத் துறை இந்திய அரசின் வெளியுறவு துறையாக மாற பாடுபட போவது யார்?

8.வளைகுடா தொழிலாளர்கள் சந்திக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சனைகளை கேட்டு, அவற்றிற்கேற்றவாறு உதவிட வளைகுடா நாடுகளின் விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்திய தூதரகம் சார்பாக சிறப்பு முகாம்களை தொடாந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையோ நடத்தினால் எங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிட்டுமே, உள்நாட்டில் ஆண்களில்லா பல குடும்பங்கள் பல்வகை கிரிமினல்கள், ஆக்கிரமிப்பாளர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க, எங்களின் உணர்வுகளை புரிந்து உதவப்போவது யார்?

9.வளைகுடாவிலிருந்து நாங்கள் விரட்டி அடிக்கப்பட்டால் அல்லது நாங்களாகவே முடித்துக்கொண்டு வந்தாலோ நாங்கள்இந்தியதன்மையை புரிந்து காலூன்றவே பல வருடங்கள் ஓடிவிடும், எங்களுக்கு உதவிட வட்டியில்லா கடன், மானியம், வாரியம் போன்றவற்றை நிறுவிட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கலாமே? எங்களுக்கு உதவ யாருக்கு இந்த நல்ல மனம் இருக்கிறது, செயலில் காட்டுவீர்களா?

10.இது தனியார் டிவி சேனல்களுக்கு: ஷேர், ஸ்டாக் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்மாடிட்டி, வருமானவரி, இன்ஷுரன்ஸ் என நிபுணர்களை கொண்டு எத்தனையோ ஆலோசனைகளை வழங்கும் தனியார் சேனல்களே, இரவு நேரத்தில் எங்களின் வெளிநாட்டு உரிமைகள் பற்றியும், வெளியுறவு துறை பற்றியும், தூதரகத்தின் பணிகள் பற்றியும், கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் போன்றவை பற்றியும் வெளிநாட்டில் உழைக்கும் இந்தியர்கள் பற்றி அவ்வப்போது வரும் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றியும் தமிழில் ஆலோசணை வழங்க முன்வரலாமே, குறைந்தபட்சம் வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது வருவீர்களா?

இறுதியாக ஒன்றை கூறி நிறைவு செய்கின்றோம், நாங்கள் யாரும் தனி ஆட்கள் அல்ல மாறாக நாங்கள் சொன்னால் மதித்து கேட்கக்கூடிய, மதுவுக்கோ பணத்திற்கோ மயங்காத குடும்ப வாக்காளர்கள் என்ற ஜன சமுத்திரம் எங்கள் பின்னால் உள்ளதை புரிந்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் எங்களின் குறைகளையும் களைய முன் வருவீர்கள் என்ற நல்லெண்ணத்துடன் இப்போதைக்கு இத்துடன் நிறைவு செய்கின்றோம்.
வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள் சார்பாக

அபுதாபியிலிருந்து
அதிரை அமீன்

0 கருத்துகள்: