கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்!

அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரஹீம் உட்பட 15 பேர் ஈடுபட்டு வரும் செய்தியோடு தொடர்புடைய சில விபரங்களை தமிழக மக்கள் அறிந்து கொண்டால், இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்.

நம் நாட்டின் சிறைச்சாலைகளில், விகிதாச்சார அடிப்படையில் அதிகமாக இருப்பது முஸ்லிம்கள் மட்டுமே என்ற ஒரு அறிக்கையை நீதிபதி சச்சார் கமிட்டி இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கண்ட அதே நிலை தொடருவதை மனித உரிமை ஆர்வலர்  பேராசிரியர். அ. மார்க்ஸ் போன்றவர்கள் உறுதிபடுத்துகிறார்கள்.

சென்ற தி.மு.க ஆட்சியில் கலைஞர் அவர்களுடைய தலைமையிலான அரசு அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகள் கழித்திருந்த சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்தது. இன்னும் ஒரு படி மேல் சென்று - மதுரை லீலாவதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொடூர குற்றவாளிகளை 8 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்திருந்த போதும் அவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

ஆனால், விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் முஸ்லிம்கள் சிறைவாசிகளுக்கு இருந்தும் கலைஞர் அரசு இவர்களை விடுதலை செய்ய ஏனோ முன்வரவில்லை. அதற்காக புதிதாக சில காரணங்களை முன் வைத்தார்கள். அந்த காரணங்கள் அனைத்தும் சட்டத்தில் இடம் பெறவில்லை.

இத்தனைக்கும் கோவை உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அவை அனைத்தையும் மத பிரச்சினைகளால் ஏற்பட்ட மோதல்கள் அல்ல என்றே தங்களுடைய தீர்ப்புக்களில் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் நடைபெறாத விடுதலை ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியில் நடக்குமா என்ன? என்ற கேள்வியை கொண்டே முஸ்லிம்கள் மௌனம் காத்து வந்தனர்.

ஆனால் சமீபத்தில் ஜெயலலிதா அவர்களுடைய அரசு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் மற்றும் ஆறு நபர்களுடைய விடயத்தில் எடுத்திருக்கும் முடிவை தமிழக மக்கள் அதிகமானோர் ஆதரிக்கும் பட்சத்தில் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மீதும் கருணை காட்டப்பட்டால் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த நன்றி உணர்வோடு பார்க்கும் அல்லவா ?

சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் மிக சாதாரண வருமானங்களை கொண்டவர்களாகவும், இன்னும் சில பேர்  தினக்கூலிகள் என்பதும், அவர்களை நம்பித்தான் அவர்களின் குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளலாமே..

உண்ணாநிலை போராட்டத்தை தொடர்ந்துள்ள தடா. அப்துல் ரஹீம் அவர்கள் 13 ஆண்டுகளுக்குப்பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தன் வாழ்கையின் இளமை பகுதியை சிறையிலேயே கழித்தவர். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுதலை பெற்றவர். தன்னை போன்றே சிறைச்சாலைகளில் இருக்கும் மற்ற சிறைவாசிகளும் விடுதலை பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருந்து களமாடி வருபவர். இவர் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலை போராட்டத்தை நீதியின் முன் நம்பிக்கை கொண்ட மக்கள் யாவரும் ஆதரித்திட வேண்டும். குறிப்பாக இயக்கங்களாக பிரிந்து கிடக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை கடந்து சகோ. ரஹீம் அவர்களுக்கு பின்னால் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்யும் விடயத்திலாவது ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

இவரை போன்று சிறையில் இருக்கும் அப்பாவி சிறைவாசிகளை அவர்கள் சிறையில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு நம் தமிழக அரசு விடுதலை செய்திட்டால், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை போன்று சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களின் குடும்பங்கள் அனைத்தும் ஆனந்த கண்ணீரில் மிதக்கும் அல்லவா ?

ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். ஆனால், இன்று எத்தனை முஸ்லிம்கள் 16 ஆண்டுகள் கடந்தும் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்பதை நேர்மையான உள்ளத்தோடு தமிழக மக்களாகிய நாம் சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம். 

சிறையின் ஒரு நிமிடமும் - நரக வாழ்வின் ஒரு பகுதியே என மகாத்மா காந்தி அவர்கள் குறிப்பிட்டதை நினைவில் கொண்டு, சிறைவாசம் என்ற இக்கொடுமையை களைய நம்மால் முடிந்த உழைப்பை செய்ய முன் வருவோம். வாருங்கள்! வாருங்கள்!!

- பூவை அன்சாரி

0 கருத்துகள்: