கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

வக்ஃபு சட்டங்கள்-ஒரு பார்வை-1

[முஸ்லிம் சட்டம் என்பது இறைவனால் அருளப்பெற்ற விதிகளைக் கொண்டதாகும். எல்லாம் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைத் தருகிறான் என்றால், அதில் நிச்சயம் நமக்கு நன்மையே இருக்கும். தகுந்த காரணமும் இருக்கவே செய்யும். மனித மூளைக்குச் சில விஷயங்கள் எட்டவில்லை என்பதற்காக இறைச்சட்டங்களை நிராகரித்தல் கூடாது. இறைச்சட்டத்தை மாற்றவோ, திருத்தவோ,சேர்க்கவோ,குறைக்கவோ மனிதனுக்கு அதிகாரம் கிடையாது.]

அறச் செயல்களான தர்மங்களில் பலவகை உண்டு. மனிதன், தன் குடும்பத்திற்காகவும், உறவினர்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும் இன்னோரன்ன பல காரணங்களுக்காகவும் பல்வேறு வகைகளில் தர்மம் செய்கிறான். நன்மையையும், இறைவனின் அன்பையும் பெறுவதற்காக தர்மக் காரியங்களில் மனிதன் ஈடுபட்டாலும், அவற்றின் மதிப்பும் தரமும் உயர்ந்து விடுகிறது.

ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்துக்களை இறைவனுக்காக வக்ஃபு என்ற அறம் செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வாரிசுகளோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களோ இருக்க முடியாது.

வக்ஃபு என்றால் என்ன? அதன் பொருள் என்ன என்பதை முதலில் பார்ப்போம். நிறுத்துதல், நிலைநாட்டுதல் என்பன இதன் சொற்பொருளாகும். இறைவன் பெயரால் ஒருவர் தன் சொத்துக்களை அர்ப்பணித்து நிலை நாட்டும் போது அது வக்ஃபு சொத்து என்னும் நிலையை அடைந்து விடுகிறது. கைமாறும் தன்மையுடைய சொத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதை வக்ஃபு என்று இஸ்லாமியச் சட்டம் அடையாளம் காட்டுகிறது. ஒரு சொத்தை வக்ஃபு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, அதன் வருமானத்தையும், பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதே நோக்கமாகும்.

வக்ஃபு என்பதற்கான விளக்கத்தைத் தருகின்ற போது இமாம்களிடையே கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், இமாம் அபூயூசுஃப் (ரஹ்) அவர்களின் கூற்றே பெரும்பாலோரால் ஏற்கப்பட்டு வருகிறது.’வக்ஃபு செய்பவர், வக்ஃபு செய்யும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாலே போதும்’ என்பது இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களின் கருத்தாகும். வக்ஃபு செய்பவர்தன் எண்ணத்தை வெளிப்படுத்திய பிறகு காஜி (நீதிபதி) அதை வக்ஃப் என ஒப்புக் கொண்டு ஆணைப்பிறப்பிக்க வேண்டும் என்றும், வக்ஃப் சொத்தை அர்ப்பணித்த பின்னும் அவரது உரிமை தொடர்கிறது என்றும் கடன் அளித்ததைப் போலவே அந்த தர்மங்கள் இருக்கின்றன என்றும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.

வக்ஃப் சொத்தை முத்தவல்லியிடமோ, காப்பாளரிடமோ ஒப்படைத்த பிறகே வக்ஃப் முழுமை பெறும் என்பது இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.

ஆனால், இமாம் அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் சமுதாய நலனுக்காகவே வக்ஃப் சொத்து கொடுக்கப்பட்டாலும், அல்லாஹ் மட்டுமே அதற்கு உரிமையாளனாகி விடுகின்றான். எனவே காஜியின் ஆணை தேவையில்லை என்று விளக்கமளிக்கிறார்கள்.

காசிமியாசோடீஸ் - Vs - செயலாளர், மெட்ராஸ் ஸ்டேட் வக்ஃபு போர்டு (1964) என்ற வழக்கின் தீர்ப்பில் வக்ஃப் என்பதற்கு முக்கியமான மூன்று விளக்கங்கள் தரப்பட்டன.

 1. வக்ஃப் சொத்தின் அர்ப்பணிப்பு சமய நோக்கு கொண்டதாக இருக்க வேண்டும்; சமய சார்பற்ற நோக்கைக் கொண்ட அன்பளிப்பு அர்ப்பணம், டிரஸ்ட் எனப்படும்

பொறுப்புரிமை அமைப்பு என்றாகுமே தவிர வக்ஃப் ஆக முடியாது.

2. வக்ஃப் நிரந்தரத் தன்மை உடையதாக இருக்க வேண்டும். 
அப்படிநிரந்தரத்தன்மை இல்லாதவை ஸதகா என்னும் அறச்செயலாக அமையுமே தவிர, இஸ்லாமியச் சட்டப்படி வக்ஃப் என அழைக்க முடியாது.

3. வக்ஃபின்நுகர் உரிமை மனிதநலனுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும்.

இந்திய வக்ஃப் சட்டம்

இந்தியாவில் வக்ஃப் செல்லுபடியாகும் சட்டம் 1913-ல் இயற்றப்பட்டது. தன் தேவைக்கு அதிகமான சொத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அதை மனித நலனுக்காகப் பயன்படுத்துவது கடமையாகும். இந்த அடிப்படையிலேயே வக்ஃப் மற்றும் டிரஸ்ட் ஆகியவை உருவாகின. ரீஅத் அடையாளம் காட்டுகிற நபி வழி, இறையச்சம், தர்மம் ஆகிய நோக்கங்களுக்காக நிரந்தரத் தன்மையுடன் அல்லாஹ்ளக்காக சொத்தை அர்ப்பணிக்கும் போது அது வக்ஃப் என அழைக்கப்படுகிறது.
டிரஸ்ட் என்பது அப்படியல்ல. சொத்துரிமை ஒருவருக்கு தரப்படுவதோடு, வேறு ஒருவருக்கும் அதை மாற்றம் செய்யலாம்.

வக்ஃப் முழுமை பெறுவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் தேவை. 1.நிலையான அர்ப்பணம் 2. வக்ஃபை அறிவித்தல் 3. உயில் மூலம் வக்ஃப் (உயில் வாயிலாக வக்ஃப் செய்தால் சொத்தின் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே வக்ஃப் செய்ய முடியும்) 4. நிரந்தரத் தன்மை உடையது.

5. இடம் பெயராச் சொத்து. ஹிதாயா என்னும் சட்டப்புத்தகத்தின் கருத்துப்படி இடம்பெயரும் பொருள்களை வக்ஃப் செய்தல் பொருந்தாது. எனினும் ஹிதாயாவின் காலத்துக்கு முன்பிருந்தே இத்தகைய பொருள்களை வக்ஃப் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

வக்ஃபின் வகைகள்

வக்ஃப் அளிப்பவருக்கு வாகிஃப் என்று பெயர். பொது வக்ஃப், தனி வக்ஃப் என இருவகைப்படும். எனினும், பொது வக்ஃப், பாதி பொது, தனி வக்ஃப் என மூன்று வகையான பிரிவுகள் அதிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

பாலம், கிணறு, சாலை போன்ற தர்மங்களை அர்ப்பணிக்கும் போது அவை பொது வக்ஃப் ஆகிவிடும். குடும்ப நலனுக்காகப் பாதியும், பொது நலனுக்காகப் பாதியும் அர்ப்பணிக்கப்படும் போது பாதி பொது வக்ஃப் ஆகும். வக்ஃப் அளிப்பவரின் குடும்ப நலனுக்கும், உறவினருக்கும் மட்டுமே நன்மை அளிப்பது தனி வக்ஃப் ஆகும். இதனை ’வக்ஃபுன் அலல் அவ்லாத்’ என்பர். ஒரு முஸ்லிம் வக்ஃப் ஏற்படுத்தி, அதன் பயனை உற்றார் உறவினர் நலனுக்கு உடனடியாகத் தந்து, அவர்கள் காலத்துக்குப் பிறகு மார்க்கம் அனுமதிக்கும் அறச் செயல்களுக்குப் பயன்படுத்துமாறு அறிவிப்பதே ’வக்ஃபுன் அலல் அவ்லாத்’ ஆகும்.இஸ்லாமியச் சட்டப்படி, ஏழை எளிய குடும்பத்தார்க்கு வக்ஃப் சொத்தின் வருமானங்களைக் கொடுத்து குடும்பத்தார்க்ள இல்லாது போனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தாலும் அந்த வக்ஃப் செல்லும். ஆனால் மேற்கத்திய தத்துவப்படி குடும்பத்தினருக்கு கொடுப்பது தர்மமாகாது. இந்தத் தத்துவம் இந்திய நீதிமன்றங்கள் சில வழக்குகளில் வழங்கிய தீர்ப்பில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கதாகும்.‘அப்துல் பத்தாஹ் Vவி ரசமையா (1894)’ என்ற வழக்கில், வக்ஃப் சொத்தின் வருமானம் குடும்பத்திற்கு என்றும், அவர்களுக்குப் பிறகு சந்ததிகள் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்றும் ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ரீஅத் சட்டத்திற்கு மாறானதாக இருந்தால் முஸ்லிம் வக்ஃப் சட்டம் இயற்றுமாறு முஸ்லிம்கள் அரசைக் கேட்டுக் கொண்டனர். இதன் விளைவாகவே 1913ல் முஸ்லிம் வக்ஃப் சட்டம் ஏற்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி குடும்பத்தின் நலனை முற்படுத்தி ஏற்படுத்தப்படும் வக்ஃப் செல்லும் என்றானது. வக்ஃப் செய்தவர் தன் வாழ்க்கை முழுவதும் தன்னுடைய பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் நிபந்தனையிட்டிருந்தாலும், வாழ்நாளில் பட்ட கடனைத் தீர்க்க வகை செய்திருந்தாலும் வக்ஃப் செல்லும் என்பது ஹனபி மத்ஹபுச் சட்டமாகும். அசையும் சொத்து, அசையாச் சொத்து, பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்தாலும் ரீஅத் சட்ட வரம்புக்கு உட்பட்டிருப்பின் செல்லும்.

1913ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் ரத்துக்கள் அந்த ஆண்டுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட குடும்ப வக்ஃப்களை மட்டுமே செல்லுபடியாக்கியது. அதற்கு முந்தைய வக்ஃப் களை அல்ல என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்தன. பின்னர் 1933-ல் முஸ்லிம் வக்ஃப் சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1913க்கு முந்தைய வக்ஃபுகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.  (இன்ஷா அல்லாஹ் மேலும் வரும்)
கட்டுரை ஆக்கம் நன்றி : நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி
source:http://nidur.info/

0 கருத்துகள்: