கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத சமூக நீதியை பின்பற்றாத தமிழக அரசைக் கண்டித்து ஆளுநர் உரை புறக்கணிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையாற்ற தொடங்கும் போது பின் வரும் கருத்துகளை பதிவுச் செய்ய முயற்சித்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் அ. அஸ்லம் பாஷா ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர்.

2011ல் நடைபெற்ற சட்டமன்றப் பேரவைத் தேர்தலின் போது அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் திருச்சி, நாகர்கோவில், ஜோலார்பேட்டை முதலிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் களுக்கான இடஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படுமென வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு 14 வது சட்டமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் பல்வேறு விவாதங்களில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுமார் 8 முறை வலியுறுத்தி பேசி வந்தனர். நேரிலும் முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது

கடந்த ஜீலை 6 2013ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கோட்டை நோக்கி பேரணிப் போராட்டம் நடத்தபட்டது. இந்த போராட்டத்தில் மக்கள் பங்குக் கொள்வதை தடுக்கும் வகையில் குக்கிராமங்களிலிருந்து பெரும் நகரங்கள் வரை காவல்துறை தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதினும் சென்னையில் பல்லாயிரக்கணக்கில் காவல்துறை கைதுச் செய்ய இயலாத அளவிற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் 2011 சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து 32 மாதங்கள் ஆகிய பின்னும் இந்த அதிமுக அரசு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை.

2009 தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு அச்சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படுமென அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதினை நிறைவேற்றுமாறு மனிதநேய மக்கள் கட்சி பல முறை சட்டமன்றத்தில் வலியுறுத்திள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தியும் தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கடந்த ஜீலை 6ல் போராட்டம் நடைபெற்றது. இந்த வாக்குறுதியையும் அதிமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது.

சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு சிறப்பு உயர்நிலை மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக 83 மருத்துவப் பேராசிரியர்களை நியமனம் செய்வதில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட மாட்டாது என்று அறிவித்து இந்த அரசு தமிழகத்தில் நீண்டக் காலமாக கடைபிடித்து வரும் இடஒதுக்கீடு முறையை புறக்கணித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, சமூக நீதியை பின்பற்றாத அதிமுக அரசை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

0 கருத்துகள்: