கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அட... அங்கேயும் இப்படி தானா ?

முன்பெல்லாம் கிராமங்களில் “மணமகளே மருமகளே வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா…” எனும் பாடல் ஒலிக்கும். அப்போது மணப்பெண் புகுந்த வீட்டுக்குள் “வலது காலை” எடுத்து வைத்து நுழைவார். இதற்காகவே சுற்றிலும் பாட்டிமார் நிற்பார்கள். “முதல்ல.. உன் வலது காலை எடுத்து உள்ளே வைம்மா” என்று அட்வைஸ்கள் விழும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைவது வீட்டுக்கு வளத்தைக் கொண்டு வரும் என்பது நமது செண்டிமெண்ட்.

ரோமர்களுக்கும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போது வலது காலை வைத்து தான் நுழைவார்கள். அப்படி நுழைவது தான் ரொம்ப நல்லது என்பது அவர்களுடைய எண்ணம். இங்கிலாந்தில் இந்த செண்டிமெண்ட் இன்னும் ஒரு படி மேலே. அவர்கள் செருப்பு போடும் போது கூட வலது காலைத் தான் முதலில் போடுவார்கள். அப்படிப் போட்டால் ஆயுள் நீளும் என்பது அவர்களுடைய செண்டிமெண்ட்.

ஆஹா.. பல்லியே கத்திடுச்சு. நல்ல சகுனம் தான் என வீட்டிலிருக்கும் பல்லியின் தலையில் பாரத்தைப் போடும் செண்டிமெண்ட் நமது ! சும்மாவாச்சும் பல்லிக்கு இரண்டு அடி கொடுத்தாவது உச்சுக் கொட்ட வைப்பார்கள். இந்தோனேஷியாவிலும் இதே நம்பிக்கை இருக்கிறது. கெய்கோ எனும் சிறு பல்லி போன்ற ஒன்று சத்தம் போட்டால் குஷியாகி விடுகிறார்கள். அதுவும் குழந்தைகள் பிறக்கும் போது அது சத்தம் போட்டால் செண்டிமெண்டலாக எல்லாம் சுபம் !

வீட்டுக்குள்ளே செருப்புப் போட்டு நடப்பதில்லை நாம். “வீட்டுக்குள்ள செருப்பு போட்டு நடந்தா புனிதம் கெட்டுடும் ?” என்பது பெரிசுகளின் வாதம். செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைவது ஒருவகையில் மரியாதைக் குறைவு. தாய்லாந்திலும் இதே செண்டிமெண்ட் உண்டு. செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் வந்தால் அது பயங்கர இன்சல்ட் ஆக நினைக்கிறார்கள். தெருக்களைச் சுற்றி அழுக்கைச் சேகரித்து வரும் செருப்பு வெளியே கிடப்பது தான் நல்லதும் கூட.

வலது கையால் எதையும் கொடுக்க வேண்டும் என்பது நமது செண்டிமெண்ட். இனம், மதம், ஜாதி எல்லாவற்றையும் தாண்டி இந்த செண்டிமெண்ட் உலவுகிறது. இந்த செண்டிமெண்ட் அப்படியே இருக்கிறது தாய்லாந்தில். வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். இடது கை வலது கை மணிக்கட்டைப் பிடித்திருக்க வேண்டும். இப்படிக் கொடுத்தால் தான் கொடுப்பவருக்கும் நல்லது, வாங்குபவருக்கும் பயன் தரும். இது அவர்களுடைய செண்டிமெண்ட்.

உள்ளங்கை அரிக்குது. இன்னிக்கு நல்ல காசு வரும்போல இருக்கு. என நாம் சொல்வதைப் போலவே துருக்கியில் உள்ளவர்களும் சொல்கிறார்கள். அவர்களுடைய செண்டிமெண்ட் படி, இடது கையில் அரித்தால் பணம் வரும். கொஞ்சம் இடம் மாறி வலது கையில் அரித்தால் அவ்வளவு தான். உள்ளதும் போய்விடுமாம் !

“பெரியவங்க இருக்கும்போ கால்மேல கால் போடாதே” என முந்தைய தலைமுறையினர் சொல்வார்கள். அது எதிரே இருப்பவர்களுக்குச் செய்யும் அவமரியாதை என்பது அவர்களுடைய எண்ணம். இதே செண்டிமெண்ட் தாய்லாந்திலும் உண்டு. கால் மேல் கால் போட்டால் காலால் அடுத்தவரைச் காலால் சுட்டிக் காட்டுவது போல இருக்குமாம். அது அடுத்தவருக்குப் பெருத்த அவமானமாகிவிடும். எனவே கால் மேல கால் போடக் கூடாது என்பது அவர்களுடைய விளக்கம்.

 “பூனை குறுக்கே வந்துச்சா வெளங்கினாப்ல தான் “ என்பது நம்ம ஊர் செண்டிமெண்ட் மட்டுமல்ல. அமெரிக்காவிலும் ஒரு காலத்தில் இந்த செண்டிமெண்ட் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. அதுவும் கறுப்புப் பூனை வந்தால் அதோ கதி தான். அந்த காரியத்தையே அப்படியே விட்டு விடுவார்களாம். காரணம், அவர்களைப் பொறுத்தவரை கறுப்புப் பூனை என்பது சாத்தானின் குறியீடு !

கிராமப் புறங்களில் ஒரு நம்பிக்கை உண்டு. ஏதாச்சும் பை கொடுத்தால் வெறுமனே கொடுக்க மாட்டார்கள். வெற்றுப் பை, வெற்றுப் பாத்திரம் எல்லாம் கொடுக்கக் கூடாது என்பது செண்டிமெண்ட். இது ஹவாய் தீவு மக்களிடையேயும் பிரபலமாய் இருக்கிறது. காசு ஏதும் இல்லாமல் பையைக் கொடுத்தால், அதில் காசே தங்காதாம்.

யாராச்சும் படுத்திருந்தா அவர்களைத் தாண்டிப் போகக் கூடாது. அப்படி தாண்டினால் அந்த நபர் வளர மாட்டார். அதுவும் குழந்தைகள் படுத்திருந்தால் தாண்டவே கூடாது. இதெல்லாம் நம்ம கிராமங்களின் செண்டிமெண்ட். இதுல சுவாரஸ்யம் என்னன்னா ? இந்த செண்டிமெண்ட் அமெரிக்காவிலும் உண்டு என்பது தான்.

ராத்திரி நகம் வெட்டக் கூடாது என்பதும் நம்ம ஊரில் கேட்டுப் பழகியது தான். இதே செண்டிமெண்ட் கொரியர்களிடமும் உண்டு. இரவில் நகம் வெட்டினால் அந்த நகத்தை எலிகள் வந்து தின்று விடுமாம். அப்படித் தின்றால் உங்கள் ஆன்மாவை அது அபகரித்துக் கொள்ளுமாம். அடேங்கப்பா !
நன்றி:நீடூர் சீசன்ஸ்

0 கருத்துகள்: