கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சிறுபான்மையினர் எதிர்ப்பில்... அன்று பட்டேல் இன்று மோடி

வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்பட இருக்கிறது. இனிமேல் இதுதான் உலகிலேயே மிக உயரமான சிலையாக இருக்கப்போகிறது. சிலை வைக்கப்போவதாக அறிவித்துள்ளவர் யார் தெரியுமா?

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான்.

குஜராத்திலுள்ள சர்தார் சரோவர் அணை அருகிலுள்ள சாதுபெட் என்னும் தீவில் இச்சிலை அமைக்கப்படும் என்றும், இது தன்னுடைய கனவுத் திட்டம் என்றும் மோடி அறிவித்திருக்கிறார். குஜராத் விவசாயிகளிடம் இருந்து தலா 250 கிராம் இரும்பு நன்கொடையாகப் பெறப்பட்டு, இரும்பு மனிதருக்குச் சிலை அமைப்பதே திட்டத்தின் சிறப்பு அம்சம். (அன்று ராமர் கோயிலுக்காக அத்வானி செங்கல் வாங்கினார். மோடியின் காலத்தில் அது இரும்பாகப் பரிணாமம் பெற்றுள்ளது) அரசியல் தலைவர்களுக்குச் சிலை வைப்பது நம்நாட்டில் வழக்கமான ஒன்றுதான். அதில் ஒன்றும் சிக்கல் இல்லை.

பாரதிய ஜனதாக் கட்சியின் சிறப்புக்குரிய தலைவரான மோடி, அக்கட்சியின் அடித்தளமான ஆர்.எஸ்.எஸ்.இன் நிறுவனரான ஹெட்கேவாருக்கோ, தத்துவ ஆசிரியரான மாதவ சதாசிவ கோல்வால்கருக்கோ, தான் சார்ந்துள்ள கட்சியின் நிறுவன ரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கோ சிலை வைப்பதாகச் சொன்னால், அதில் உள்ள நியாயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், இந்திய தேசியக் காங்கிரசின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராய் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியப் பிரச்சாரக்குழுத் தலைவரும், வரும் தேர்தலில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக உருவாக்கப்பட்டுக் கொண்டி ருப்பவருமான நரேந்திர மோடி சிலை வைப்பது ஏன்? அதுவும், தன்னுடைய கனவுத்திட்டம் என்ற அறிவிப்புடன், 182 மீட்டர் உயரத்தில், உலகிலேயே மிக உயரமான சிலை என்னும் பெருமையுடன்...-?

பட்டேல் காங்கிரசுக்காரராக இருந்தாலும், குஜராத்தில் பிறந்தவர். எனவே மண்ணின் மைந்தரைச் சிறப்பிக்க மோடி நினைத்திருக்கலாம் என்றொரு பதிலை நாமாகவே போட்டுக் கொண்டாலும்... இன்னொரு கேள்வி பிறக்கிறது. இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி குஜராத்தில் தானே பிறந்தார். இந்தியாவின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் குஜராத்தில் பிறந்தவர்தானே... அதிலும் இந்திராகாந்திக்குக் கடும் போட்டியாக இருந்தவர் மொரார்ஜி... அவர்களுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று மோடிக்கு ஏன் தோன்றவில்லை---?

மொரார்ஜி தேசாய் பார்ப்பனராக இருந்த போதும், பிரதமர் நாற்காலியில் ஒருமுறையேனும் அமர்ந்துவிட வேண்டும் என்றளவில்தான் அவருடைய சிந்தனை இருந்தது. பார்ப்பனராக இல்லாவிட்டாலும் வல்லபாய் பட்டேல் வருணாசிரமவாதியாகத் திகழ்ந்தார். பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் கடுமையான போக்குடையவராக இருந்தார். எல்லாவற்றையும்விட மிக முக்கியமான சிறப்புத் தகுதியும் பட்டேலுக்கு உண்டு. அதுதான் இசுலாமிய எதிர்ப்பு. சுருக்கமாகச் சொன்னால், மோடியின் நிலைக் கண்ணாடி வல்லபாய் பட்டேலை பிரதிபலிக்கிறது. அதனால்தான் பட்டேலுக்கு உலகத்திலேயே உயரமான சிலை வைக்க வேண்டும் என்று மோடி கனவு கண்டிருக்கிறார்.

மார்டின் லூதர் கிங் தனக்கு ஒரு கனவு இருப்பதாகச் சொன்னார். அவருடைய கனவு, வெள்ளை நிறவெறிக்கு எதிராக இருந்தது. கருப்பின மக்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதாக இருந்தது. மோடியின் கனவு, சிறுபான் மையினருக்கு எதிரானது. ஒற்றைத்தன்மை கொண்ட இந்து ராஜ்ஜியத்தைக் கட்டமைப்பது. அதனால்தான் வருணாசிரமத்தைத் தூக்கிப் பிடித்த, சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கிய வல்லபாய் பட்டேலைத் தன்னுடைய கனவுநாயக னாக வரித்துக் கொண்டிருக்கிறார் குஜராத் முதல்வர் மோடி.

விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில், நேரு தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைந்த போது, உள்துறை இலாகாவுக்கு காங்கிரசைச் சேர்ந்த வல்லபாய் பட்டேலும், நிதி இலாகாவுக்கு முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த லியாகத் அலிகானும் பொறுப்பு வகித்தனர். சட்டம், ஒழுங்கை உள்ள டக்கிய உள்துறையைத் தன்னிடம் வைத்துக் கொள்வதில் தீவிரமான பிடிவாதம் காட்டினார் பட்டேல். அவர்தான் நிதி இலாகாவை முஸ்லிம் லீக்குக்குத் தரச் சொன்னவர். ஆனால் அவருடைய கணக்குத் தவறாகப் போய்விடவே, முஸ்லிம் லீக்கிடம் அருவெறுப்பும், எரிச்சலும் கொண் டார். இதன் பின்னணியில்தான் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக ஆதரித்தார்.

பட்டேலை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளனர். சுதந்திரத் திற்குப் பிறகு, தனித் தனியாக இருந்த சமஸ் தானங்களை இரும்புக்கரம் கொண்டு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதால், இரும்பு மனிதர் என அழைக்கப் பட்டதாக, நம்முடைய பிள்ளைகளும் படித்து வருகின்றனர்.

வல்லபாய் பட்டேலின் இரும்புக்கரம் பிரிவினைக் குப்பிறகு சிறுபான்மையினராகிப்போன முஸ்லிம்களின் பக்கம் மட்டுமே நீண்டது என்பதை வரலாற்றை நுணுகிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். நாட்டின் ஒற்றுமையை விட, இந்துப் பெரும்பான்மை உடைய ஒரு நாடு தங்களுக்கு வேண்டும் என்பதில்தான் பிராமணியவாதிகள் உறுதிகாட்டினர். அவர்களில் முதலில் நின்றவர்கள் சாவர்கரும், பட்டேலும். வரலாற்றாசிரியர் ஆர்.சி.மஜூம்தார் பட்டேலின் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்பதைக் கூறுகிறார். “(கிரிப்ஸ்)அமைச்சரவைக் குழுவின் திட்டம் இதைவிடச் சிறந்தது என்னும் ஆசாத்தின் கருத்தை பட்டேல் மறுத்தார். அவர் கூறினார் - கடந்த ஒன்பது மாத காலமாக இடைக்கால சர்க்காரில் இருந்த அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது, மே 16 அறிக்கை ( அமைச்சரவைக் குழு அறிக்கை) நடைமுறைக்கு வராமல் போனதற்கு எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அதை நாம் ஏற்றுக் கொண்டிருந்தால், முழு இந்தியாவும் பாகிஸ்தான் வழியில் போயிருக்கும். இப்போது நமக்கு 75 முதல் 80 சதவீதம் வரையிலான பகுதி கிடைக்கிறது. இதை நமது சிந்தனைக்கு ஏற்ப வளர்க்கலாம், வலுவாக்கலாம்”

அப்படியென்ன சிந்தனை அவர்களுக்கு இருந்தது?

வேறென்ன... இன்று பா.ஜ.க.வின் லட்சியமான ‘அகண்ட பாரதம்’, அன்றைய ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் போன்ற இந்துத்துவ அமைப்பினரின் ‘இந்துராஷ்டிரம் அல்லது இந்துஸ்தானம்’ என்பதுதான் பட்டேல் வளர்க்க நினைத்த, வலுவாக்க நினைத்த சிந்தனை. இந்தத் தகுதிகள் தனக்கும் பொருந்தி வருவதால் தான் பட்டேலுக்கு மோடி இரும்பில் சிலை வடிக்கப் போகிறார்.

சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீர், ஐதராபாத், திருவி தாங்கூர், ஜுனாகத் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய மறுத்தன. இவற்றைப் பணிய வைப்பதற்குப் துணைப்பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த பட்டேல் இராணுவத்தின் துணையோடு கையாண்ட உத்திகள் முரண்பா டானவை.

காஷ்மீர் மன்னர் அரிசிங், ஓர் இந்து. பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். அவர்கள் காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்கவே விரும்பினர். ஆனால் மன்னர் அரிசிங்கைப் பணிய வைத்து, மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியில்தான் செல்ல வேண்டும் என்று சொல்லி, இந்தியாவுடன் இணைத்துவிட்டார்.

ஜுனாகத் மன்னர், முஸ்லிம் மதத்தவர். பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். மன்னர் பாகிஸ்தானுடன் இணைய நினைத்தார். ஆனால் இங்கே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்லி இந்தியாவுடன் இணைத்தார். இணைத்த கையோடு அங்கே ஆலயம் எழுப்பப்படும் என்றும் அறிவித்தார். நேரு அமைச்சரவையில் இருந்த மற்றொரு அமைச்சர் கே.எம்.முன்ஷி. இவர் குஜராத் பார்ப்பனர். முஸ்லிம்களின் மீது வெறுப்பும், வர்ணாசிரமப் பற்றும் கொண்டவர். ‘அகண்ட இந்துஸ்தான்’ என்றும் பேசிவந்தவர். இவரிடம்தான் கோயில் கட்டும் பொறுப்பை பட்டேல் ஒப்படைத்தார். இருவரும் அரசாங்கப் பணத்தில் கோயில் கட்டத் திட்ட மிட்டனர். மக்களின் எதிர்ப்பாலும் காந்தியின் தலையீட்டாலும் அது தவிர்க்கப்பட்டது என்பது வேறு.

வல்லபாய் பட்டேல் மிகத் தீவிரமான ஆர்.எஸ்.எஸ். ஆதர வாளர். காந்தி படுகொலைக்குப் பிறகு, சூழ்நிலையின் கட்டாயத்தால், உள்துறை அமைச்சராக, ஆர்.எஸ்-.எஸ்.யைத் தடை செய்தார். சிறிது காலத்திற்குப் பிறகு ஆர்.எஸ். எஸ்.சின் விசுவாசியாகத் தடையை நீக்குவதற்கும் அவரே ஏற்பாடு செய்தார். காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர் பில்லை என்றும் சொன்னார். பார்ப்பனியத்தின் இரட்டைவேடம் பட்டேலுக்கு எளிதாகக் கைவந்தது - மோடியைப் போல.

நேருவுக்கும் பட்டேலுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றியபோதெல்லாம், ஆர்.எஸ்.எஸ்.பட்டேலை ஆதரித்தது. காஷ்மீர் சிக்கலில் பட்டேல் உதவிநாடிச் சென்ற இடம் எது தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ்.சிடம் சென்றுதான் உதவிகேட்டார். அதன் தலைவர் கோல்வால்கரும் காஷ்மீர் மன்னரைச் சந்தித்துப் பேசினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, டெல்லியில் அதிகமான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சராக இருந்த பட்டேலின் வசம்தான் டெல்லியின் நேரடி அதிகாரம் இருந்தது. ஆனால் அவரோ கலவரத்தை அடக்க எந்தவித நடவடிக் கையும் எடுக்காமல், காந்திஜிக்கு கிடைத்த தகவல்கள் மிகைப்படுத்தப் பட்டவை என்று சமாதானம் கூறிவந்தார். “எண்ணிக்கையில் மிகுதியாக இருந்த ஒரு பிரிவினர் (இந்துக்கள்), உள்துறை மந்திரியான சர்தார் பட்டேலுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டனர்” என்கிறார் ஆசாத், (இந்தியா விடுதலை வெற்றி பக்-265)

2002 குஜராத் கலவரத்தின் போது, இதே நிலையைத்தான் மோடி கையாண் டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டேலின் முஸ்லிம் வெறுப்பை, மௌலானா அபுல்கலாம் ஆசாத், ‘இந்தியா விடுதலை வெற்றி’ என்னும் தன்னுடைய சுய சரியாதை நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். பட்டேலும், ஆசாத்தும் சமகாலத் தவர்கள். நெருங்கிப் பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி கொண்டாடுவதற்குக் காரணமான வல்லபாய் பட்டேலின் சிறப்புத் தகுதிகள், பிறமத வெறுப்போடு நின்றுவிடவில்லை. வர்ணாசிரமத்தின் விளைச்சலான சாதியத்தையும் இரும்புமனிதர் கெட்டியாகக் கடைப் பிடித்திருக்கிறார். இதைப்பற்றிய பதிவு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 16 இல் இருக்கிறது. அதில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்.

1942இல் உலகப்போரை முன்னிட்டு, இந்தியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கோடு, வைசிராய் லின்தோ பிரபு பல்வேறு பகுதியினரின் பிரதிநிதிகளையும் தம்முடைய இருப்பிடத்துக்கு அழைத்துப் பேசினார். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஷெட்யூல்டு வகுப்புகளைச் சேர்ந்தவர் களும் இருந்தனர். இத்தகைய கீழ்த்தர மானவர்களுக்கு வைசிராய் அழைப்பு விடுத்ததை திரு வல்லபாய் பட்டேலால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதற்குப் பிறகு ஆமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திரு வல்லபாய் பட்டேல் பின்கண்டவாறு கூறினார்.

“வைசியராய் இந்து மகாசபைத் தலைவர்களை அழைத்தார், முஸ்லீக் தலைவர்களை அழைத்தார். அத்தோடு காஞ்சிகள் (எண்ணெய் எடுப்போர்), மோச்சிகள் (செருப்பு செப்பனிடும் செம்மான்கள்) போன்றோரையும் கூட அழைத்தார்”

திரு வல்லபாய் பட்டேல் மனக் காழ்ப்பும், வன்மமும், சுடுசொல்லும் கொண்ட தமது சொற்களால் காஞ்சி களையும், மோச்சிகளையும் மட்டுமே குறிப்பிட்ட போதிலும், இந்த நாட்டின் அடிமட்ட வகுப்புகளிடம், ஆதிக்க வகுப்புகளும், காங்கிரஸ் மேலிடமும் கொண்டுள்ள பொதுவான வெறுப்பை யும், இகழ்ச்சியையுமே அவருடைய உரை குறிக்கிறது என்பதில் அணுவள வும் ஐயமில்லை. (பக்கம் 338-339).

தலித்துகள் தூய்மைப் பணி செய்வதை, இந்த சமூகத்துக்கு மற்றும் கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதி மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும் என்று கீதாஉப தேசம் செய்த மோடி, அடிமட்ட மக்களின்பால் காழ்ப்புணர்ச்சியைக் கக்கிய வல்லபாய் பட்டேலை மானசீக குருவாகக் கொண்டதில் வியப்பில்லைதான்.

மேற்சொன்ன ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும்போது, வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைக்கும் மோடியின் கனவுத் திட்டம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மதச் சிறுபான்மை யினருக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை யாகவே படுகிறது. ஆனால் ஊடகங் களோ, மோடியின் மதவெறி முகத்தை மறைத்து, அவருக்கு ஒளிவட்டம் போடுவதையே தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. குஜராத்தின் வளர்ச்சி என்பது ஒருபக்கச் சார்புடையது. அது மேல்தட்டு மக்களின் வளர்ச்சியாக மட்டுமே இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு எதிர்த்திசையில் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்பதை, குஜராத்தின் சமூக ஆர்வலர்களே சுட்டிக்காட்டியுள்ளனர்.

வல்லபாய் பட்டேலை முன்மாதிரி யாகக் கொண்டுள்ள, தீவிர மதவாதி யான மோடியின் கையில் நாட்டின் ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட நேர்ந்தால், ஒட்டுமொத்த இந்தியாவுமே குஜராத்தாக மாற்றப்படும் அபாயத்தை எண்ணிப் பார்க்கும்போது நமக்கு அச்சமாக இருக்கிறது.

(உதவிய நூல்கள் - காலந்தோறும் பிராமணியம் (பாகம் 5), பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 16. India wins Freedom))

இரா.உமா

0 கருத்துகள்: