கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ரமழானை முடித்துவிட்டோம் இனி எங்கே?

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ரமழான்கள் வந்துவிட்டுப் போவது பருவகாலக் கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகவல்ல. தனது உள், வெளி வாழ்க்கையை இஸ்லாத்தினால் அழகுபடுத்தி வாழ நினைப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும், ஊட்டச்சத்தையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகவே.

ரமழான் வருகின்றபோதுஅவசர அவசரமாகப் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் தயார் செய்யப்படுகின்றன.
ஆலிம்களும் ஹாபிழ்களும் மஸ்ஜித் நிருவாகிகளும் சுறுசுறுப்படைகின்றனர். பேச்சாளர்களுக்கு தட்டுப்பாடும் பஞ்சமும் ஏற்படுகின்றது.

தராவீஹ், தஸ்பீஹ், கியாமுல்லைல், பயான், இப்தார், ஸகாத், ஸதகா, உம்ரா, ஸியாரத் என ரமழான் களைகட்டுகின்றது. இஸ்லாத்தை நேசிக்கும் எந்த உள்ளம் தான் இந்த ஆன்மிகப்பூரிப்பைக் கண்டு மகிழ்ச்சியடையாதிருக்கும்!
எனினும், பரிதாபம்! அந்த மகிழ்ச்சியின் ஆயுள் ரமழான் 27 வரையில்தான். ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டுவிட்டால் இது நோன்பு நோற்ற சமூகமா? என்று நினைக்கத் தோன்றுமளவு நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.

பெருநாள் காலை ஃபஜ்ருத் தொழுகைக்கே மஸ்ஜித் வெறிச்சோடியிருக்கும். ரமழானில் களைகட்டியிருந்த ஆன்மிகம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கும்.

இது ஏன் நடக்கிறது? ரமழானில் நோன்பு நோற்ற சமூகத்திற்கு என்ன நடந்தது?

இந்த வினாவுக்கான விடையை சற்று சீர்தூக்கிப் பார்ப்பதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.அல்லாஹ் மனிதனை இரண்டு பக்கங்கள் கொண்டவனாகப் படைத்திருக்கிறான். ஒன்று அவனது வாழ்க்கையின் வெளிப்பக்கம் மற்றையது உள்பக்கம்.

இதேபோன்று அல்லாஹ்வின் மார்க்கத்திலும் மனிதனது இயல்புக்கு இசைவான இரண்டு பக்கங்களை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். வாழ்வின் வெளிப்புறத் தேவைகளுக்கு வழிகாட்டும் பகுதி, வாழ்வின் உட்புறத் தேவைகளுக்கு வழிகாட்டும் பகுதி என மார்க்கத்தில் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன.

மனிதனது உட்புறம் என்பது அவனது அறிவு, சிந்தனா சக்தி, மனோபாவங்கள், குண இயல்புகள்,இலட்சியங்கள், கனவுகள், நம்பிக்கைகள், ஆசாபாசங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றைக் குறிக்கும். வெளிப்புறம் என்பது அவனது கலை, கலாசாரம், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள்,வழிமுறைகள், வழிபாடுகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றைக் குறிக்கும்.
இஸ்லாம் முழு வாழ்க்கைக்குமான வழிகாட்டல் என்ற வகையிலும் மனிதனது உள், வெளிப் பகுதிகள் இரண்டையும் நூற்றுக்கு நூறு வீதம் கவனத்தில் கொண்டே அது மனிதனை வழிநடத்துகிறது.

குர்ஆன் பற்றிய அறிவு (இல்ம்), இறை சிந்தனை (திக்ர்), கொள்கைத் தெளிவும் அதில் ஆழ்ந்த பற்றுறுதியும் (ஈமான்), நற்குணங்கள் (அஃக்லாக்) இலட்சியக் கனவுகள் (அல்லாஹ்வின் அன்பினால் கிடைக்கப் பெறுகின்ற மறுவுலக சுவனம், இகாமதுத்தீன் பணியினால் உருவாக்கப்படுகின்ற பூவுலக சுவனம்) போன்றவற்றினூடாக இஸ்லாம் மனிதனது உட்புறத்தை அலங்கரிக்கிறது. மனிதனது உட்புறத்தை இவற்றினால் நிரப்பி அலங்கரிப்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும் அல்லது அத்திபாரமாகும்.

இந்த அத்திபாரத்தின் மீதுதான் இஸ்லாம் மனித வாழ்க்கையின் வெளிப்புறத்தை நிர்மாணிக்கிறது. தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகள் அந்த வெளிப்புற நிர்மாணத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இஸ்லாமியக் கல்வி, கலை, கலாசாரம், பழக்கவழக்கங்கள்,சம்பிரதாயங்கள், ஒழுக்கங்கள் முதலியவை வெளிப்புற நிர்மாணத்தின் மற்றுமொரு பகுதியாகும். வியாபாரம், திருமணம், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, சொத்துரிமை, உறவுகள் இவை ஒவ்வொன்றிலும் பேணப்பட வேண்டிய ஹலால் ஹராம் வரையறைகள் இன்னுமொரு பகுதியாகும். நீதியை நிலை நாட்டி, அக்கிரமங்கள் அநீதிகளை ஒழித்து அமைதி, சுபிட்சம் என்பவற்றைக் கொண்ட ஒரு உலகைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டமும் அதற்கு அடிப்படையாக அமைகின்ற ஆட்சி முறையும் வெளிப்புற வாழ்க்கையின் மற்றுமொரு பகுதியாகும்.

இவ்வாறு மனித வாழ்க்கையின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் ஒன்றிணைத்து, அலங்கரித்து,வழிகாட்டி, வாழ்வளிக்கும் வல்லமை கொண்ட மார்க்கமே இஸ்லாம்.

ஒரு முஸ்லிமின் வாழ்க்கை இவ்வாறு உட்புறத்தில் உறுதியான, ஆழமான அத்திபாரத்தையும்,வெளிப்புறத்தில் பல்வேறு நிர்மாணக் கலைகளையும் கொண்ட பெருமாளிகையாக எழுப்பப்படும் போதுதான் அது இஸ்லாமிய வாழ்வாகப் பரிணமிக்கிறது. 
எனினும் துரதிஷ்டம்! இன்று இத்தகைய தொரு நிர்மாணப்பணி களத்தில் இடம்பெறவில்லை. மாறாக அத்திபாரம் சிதைந்து ஆட்டம் கண்டிருக்கும் ஒரு கட்டிடத்தின் ஒரு பக்க வெளித் தோற்றத்தை மட்டும் அழகுபடுத்தி நிறம் பூசும் வேலைதான் நடைபெறுகிறது. ஏனைய பக்கங்கள் சிதைந்து, சீரற்று, அழுக்குகளும், அசுத்தங்களும் நிறைந்து காணப்படுகின்றன. நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அப்பக்கங்களுக்குச் செல்வதேயில்லை. அத்திபாரத்தைப் பலப்படுத்தும் பாரிய பணி, வழிமுறைகள் தெரியாததால் கைவிடப்பட்டு காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு விட்டது. கட்டிடத்தில் நிறம் பூசப்பட்ட பகுதியை மட்டுமே காட்டிக், காட்டி இப்போது பார்ப்பவர்கள் அனைவரும் அதுவே கட்டிடம் என்று நம்பத்துவங்கி விட்டார்கள். மக்கள் பார்க்கத் தவறிய ஏனைய பகுதிகளை யாராவது காட்ட முயன்றால் அவர் சமூகத்தில் விரும்பத்தகாதவராக நோக்கப்படுகிறார்.

வருடத்தில் ஒரு முறை மஸ்ஜித்கள் நிறம் பூசி அலங்கரிக்கப்படுவது போல் ரமழானுக்கு ஒரு தடவை மார்க்கத்தின் வெளிப்புறப் பகுதியை மக்கள் அலங்கரித்து விட்டுப் போகிறார்கள். ரமழான் முடிய அவர்களது வேலையும் முடிவடைகிறது. ஷவ்வால் ஆகிவிட்டால் இவர்களுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? அதனால்தான் பெருநாள் ஃபஜ்ரிலிருந்தே ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். மேலும்,

இது தவிர்க்க முடியாத விளைவு அன்றி வேறில்லை. எவரையும் குற்றம் கூறிப்பயனுமில்லை. எமது சமூகம் மனிதவாழ்வின் உள், வெளிப் புறங்கள் இரண்டையும் இஸ்லாத்தினால் அழகுபடுத்தத் துணியாத வரை இந்த ஒருபக்க மேற்பூச்சுத் திட்டம் மட்டும்தான் காலாகாலம் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பது இலகுவானதல்ல.

மனிதனின் உட்புறத்தை சிறிது நோக்குங்கள். குர்ஆன் ஸுன்னா பற்றிய விளக்கம் அங்கிருக்கிறதா?அல்லது உலகாயத சிந்தனைகளும் உலகின் ஆதாயங்களை தனது கரங்களுக்கு எவ்வாறு கிட்டச் செய்ய வேண்டும் எனம் ஆசையும் அங்கிருக்கிறதா? கொள்கைத் தெளிவும் அதில் ஆழமான பற்றுறுதியும் (ஈமான்) இருக்க வேண்டிய இடத்தில் எத்தனை எத்தனை மூட நம்பிக்கைகளும் கருத்துக் குழப்பங்களும் இன்று முஸ்லிம்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன?

இஸ்லாமியப் பண்பாடுகள் நற்குணங்கள் குடியிருக்க வேண்டிய முஸ்லிம்கள் உள்ளத்தில் பெருமை,பொறாமை, ஆற்றாமை, நயவஞ்சகம், குரோதம், வெறுப்பு, சுயநலம் போன்ற துர்க்குணங்கள் நர்த்தனம் புரிகின்றன.

சுவர்க்கத்தை இலட்சியமாகவும் அமைதிமிக்க ஒரு உலகைக் கட்டியெழுப்புவதை வழிமுறையாகவும் கனவு காண வேண்டிய முஸ்லிம் எத்தனை அற்பமான ஆசைகளை தனது உள்ளத்தில் சுமந்து வாழ்கிறான்!

இப்படி மனிதனின் உட்புறம் சிதைந்து இஸ்லாமிய வாழ்வின் அத்திபாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. இதனை சீர்செய்வது ஒரு முஸ்லிமின் அடிப்படையான கடமை என்பது உணரப்பட்டால் ரமழானோடு ஒரு முஸ்லிமின் கடமைகள் முடிந்துவிடுமா? நிகழ்ச்சி நிரல்கள் ரமழானுக்கு மட்டும் உரியதாய் இருக்குமா? ஆலிம்களுக்கும் ஹாபிழ்களுக்கும் ரமழானில் மட்டுமா? வேலை இருக்கும்.

இன்றைய முஸ்லிம்களின் வெளிப்புற வாழ்வை ஒரு கணம் நோட்டம் விடுங்கள்.
அடிப்படை இபாதத்துகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்பவற்றில் சமூகத்தின் அசிரத்தை ஒருபக்கம்

குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, பொருளீட்டல், வியாபாரம், சொத்துரிமை, கல்வி, கலை,கலாசாரம், அரசியல், வாழ்வொழுங்குகள், உறவுகள் என அனைத்திலும் ஹலால், ஹராம் வரம்புகள் சிதைக்கப்பட்டு இஸ்லாமிய வாழ்க்கை சின்னாபின்னமாகியிருக்கிறது. அநீதிகள், அக்கிரமங்கள்,தலைவிரித்தாடுகின்றன. அமைதி, சுபிட்சம் என்பன தொலைந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் இனி அவை எமக்குக் கிடைக்குமா? என்ற நம்பிக்கையே மனித சமூகத்தில் இல்லாமல் போயிருக்கின்ற அவலம்.

இத்தகைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் அயராத உழைப்பு, அர்ப்பணசிந்தை என்பன உருவாக்கப்பட்டால் ரமழானோடு கடமைகள் முடிந்துவிடுமா?

இந்த வினாக்களை ஒரு முறைக்குப் பலமுறை மீட்டிப் பாருங்கள். ரமழானோடு ஆன்மீகம் வெறிச்சோடிப் போவதற்கான காரணத்தை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை ரமழான்கள் வந்துவிட்டுப் போவது பருவகாலக் கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகவல்ல. தனது உள், வெளி வாழ்க்கையை இஸ்லாத்தினால் அழகு படுத்தி வாழநினைப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும், ஊட்டச்சத்தையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகவே.
ரமழான் எங்களை விட்டு விடைபெற்றிருக்கிறது. அத்தகைய உற்சாகம், ஊட்டச்சத்து, பயிற்சி என்பன எமக்குக் கிடைத்திருக்குமானால் நாம் ரமழானைப் போல ஏனைய காலங்களிலும் அயராது உழைப்பவர்களாக இருப்போம்.

இல்லை ரமழானோடு எமது உற்சாகம் குன்றிவிடுமானால் நாம் சிதைந்த கட்டிடத்தின் ஒரு வெளிப்பகுதிக்கு நிறப்பூச்சு செய்திருக்கிறோம். அதுவே கட்டிடம் என்ற நினைப்பில் அவ்வளவுதான். இனி அடுத்த ரமழான் வர வேண்டும் தூரிகையைக் கையிலெடுப்பதற்கு!

இஸ்லாத்தை நிர்மாணிக்கும் எண்ணம் கொண்டவர்களே! முதலில் இஸ்லாம் என்ற மாளிகையின் எல்லாப் பகுதிகளையும் மக்களுக்குக் காட்டுங்கள். பின்னர் அங்குள்ள வேலைகளைக் காட்டுங்கள். பின்னர் அவற்றை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் தெளிவான திட்டங்களையும் முன்வையுங்கள், செயல்படுங்கள். நிச்சயம் இந்த நிலைமாறும், இன்ஷா அல்லாஹ்.

எமது உள், வெளி நிலைமைகளை நாம் மாற்றாதவரை அல்லாஹ் மாற்றப்போவதில்லை.

“நிச்சயமாக ஒரு சமூகத்திலிருப்பவற்றை அவர்கள் மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் மாற்றப் போவதில்லை.”

- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

0 கருத்துகள்: