கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சவூதி: வெளிநாட்டுத் தொழிலாளருக்கு பொது மன்னிப்பு


சவூதி அரேபிய அரசு நித்தாகத் என்னும் தேசிய திட்டத்தின்படி சட்டத்திட்டங்களுக்கு உட்படாத, காலநீட்டிப்பாய் தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடித்து வெளியேற்றி வந்தது.

இதனால் வெளிநாட்டுப் பணியாளர் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், சட்ட முறைமைகளின் கீழ் வராத அயல்நாட்டுப் பணியாளர்கள் உடனடியாக தங்கள் குடியுரிமைகளையும், பணி உரிமங்களையும் சரிசெய்துகொள்ள சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் மூன்றுமாதங்கள் சலுகை அளித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் ஊழியர்நலத்துறையும், உள்துறையும் இணைந்து நேற்று எடுத்த முடிவின்படி குடியுரிமை அட்டை, பணி உரிமம் ஆகியவற்றில் சட்ட மீறல் செய்துள்ள அனைத்து வெளிநாட்டுப் பணியாளருக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் 6, 2013 க்கு முன்பு  சட்ட மீறல்கள் செய்தவர்களுக்கு இந்த மன்னிப்புப் பொருந்தும் என்றும், அந்த நாளுக்குப் பிறகான மீறல்கள் யாவும் குற்றமாகவே கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை காலாவதியானவர்களும், ஸ்பான்சர் எனப்படும் (சவூதி) பொறுப்பாளரிடமிருந்து ஓடித் தப்பியவர்களுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு பொருந்தும் என்றும், அவர்கள் உடனடியாக, தங்கள் குடியுரிமை நிலையை சரிசெய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ஜூ, உம்ரா வழியே சவூதியில் நுழைவு பெற்று ஆங்காங்கே பணியில் சட்ட அனுமதியின்றி அமர்ந்திருப்பவர்களுக்கும், ஜூலை 3, 2008க்கு முன்பு நுழைவு பெற்றவர்களாக இருந்தால், பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளரின் குடியுரிமை அட்டைகளை புதுப்பித்தல், தன் வணிக உரிமங்களைப் புதுப்பித்தல் ஆகியவை சவூதி பொறுப்பாளரின் கடமையே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி அல்லது நிறுவனம் மாற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு பொறுப்பாளர்கள் (கஃபீல்) அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சலுகைக் காலத்திற்குள் இந்த குடியுரிமை அட்டைகளையும், பணி உரிமங்களையும் சரி செய்துகொள்ள வேண்டும் என்றும், மீறுபவர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் என்று அமைச்சகங்களின் அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:http://www.inneram.com/

0 கருத்துகள்: