கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!


மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 
‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும்; தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்).

இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதி இருக்கின்றது என்பதை இந்தக் கூற்று உறுதி செய்கின்றது. ஆனால் இன்றைய நமது தொழுகைகளையின் நிலையை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா? அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியைத் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா?

தொழுகையாளிகளே! உங்களுக்கு எத்தனை எத்தனை நற்பாக்கியங்கள். தொழுகையை நிறைவேற்றும் உங்களுக்கு மாத்திரம் தான் இந்த என்னற்ற நற்பாக்கியங்கள். தொழுகையை பாழ் படுத்தும் பாவிகளுக்கு அல்ல!

தொழுகையாளிகளுக்கு வெற்றி உறுதி என்ற சுபச்செய்தி:

‘ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்முஃமினூன் 23: 1,2).

தொழுகையை ஏனைய அனைத்து வணக்கங்களை விடவும் சிறப்பிற்குரியது என்ற நற்செய்தி:

‘அல்லாஹ்வின் தூதரிடம் நற்கருமங்களில் மிகச் சிறந்தது எது? என கேட்கப்பட்ட போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது என பதிலளித்தார்கள்’. (முஸ்லிம்).

அடியான் அகிலங்களின் இரட்சகனுடன் உரையாடுகின்ற இடம் தொழுகை என்ற நன்மாராயம்:

‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (புஹாரி).

அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கின்றான் என்ற நற்செய்தி:

‘ஒரு அடியான் தனது ரப்புக்கு மிக நெறுக்கமாக இருக்கும் சந்தர்பம் ஸுஜுதாகும், எனவே அதில் பிறார்த்தனையை அதிகப்படுத்துங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

தொழுகை இஸ்லாத்தின் தூன் என்ற சுபச்செய்தி:

‘செயல்களின் அடிப்படை இஸ்லாம், அதன் தூன் தொழுகை’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (திர்மிதி).

தொழுகை பேரொளி என்ற நன்மாராயம்:

‘தொழுகை பேரொளி’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம், திர்மிதி).

தொழுகை நயவஞ்சத்தன்மையிலிருந்து பாதுகாக்கும் என்ற சுபச்செய்தி:

‘நயவஞ்சகர்களுக்கு பஃஜ்ர், இஷா தொழுகையை போன்று சிறமமான வேறு எந்தத் தொழுகையும் இல்லை. அந்த இரு தொழுகைகளுக்கு கிடைக்கும் நற்கூலிகளை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது வந்து அதில் கலந்துகொள்வார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை என்ற சுபச்செய்தி:

‘எவர் இஷா தொழுகையை கூட்டாக நிறைவேற்றுவாரோ அவர் இரவின் ஒரு பகுதியையும், அவர் பஃஜ்ர் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றும்போது முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை பெற்றுக்கொள்கின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

தொழுகை நரக நெறுப்பிலிருந்து பாதுகாக்கும் என்ற நன்மாரயம்:

‘சூரிய உதயத்திற்கு முன்னும், சூரிய மறைவிற்கு முன்னும் தொழுகையை நிறைவேற்றும் எவரையும நரகம் தீண்டாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

இந்த ஹதீஸ் குறிப்பிடுவது: பஃஜ்ருத் தொழுகையும், அஸர் தொழுகையுமாகும்.

தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களில் இருந்து தடுக்கும் என்ற சுபசோபனம்:

‘நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டும் தடுக்கும்’. (அல் அன்கபூத் 29: 45).

தொழுகை நீங்கள் அல்லாஹ்விடம் உதவி பெறுவதற்கு உள்ள சிறந்த ஊடகம் என்ற நன்மாரயாம்:

நீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்’ (அல்பகரா 2: 45).

‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’. ;’ (அல்பகரா 2: 153).

தனியாக நிறைவேற்றப்படும் தொழுகையை விட கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகைக்கு கிடைக்கும் சுபசோபனம்:

‘தனித்துத் தொழுவதை விட கூட்டாக தொழுகையை நிறைவேற்றுவது இருபத்தேழு மடங்கு நன்மையை உங்களுக்கு பெறுக்கித்தரும்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முத்தபஃகுன் அலைஹி).

  ‘தொழுகையாளிக்கு வானவர்கள் அல்லாஹ்விடம் அருள் வேண்டி பிறார்த்திக்கின்றார்கள் என்ற நன்மாராயம்:

‘உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் வுழூ முறிந்துவிடாமல் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், வானவர்கள் அவருக்காக அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! அவரது பாவங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக! என்று பிறார்த்தித்துக்கொண்டிருப்பார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நன்மாரயம்:

ஒருவர் தொழுகைக்காக நல்ல முறையில் வுழூச் செய்து, கடமையான தொழுகையை மக்களுடன் மஸ்ஜிதில் கூட்டாக நிறைவேற்றினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) . ‘உங்களில் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் ஒரு ஆறு பெறுக்கெடுத்து ஓடுகின்றது, அவர் அதில் ஒரு நாளைக்கு ஐந்து தடவை குளிக்கின்றார் அவரது உடளில் அழுக்குகள் ஏதும் தங்கி இருக்குமா? என அல்லாஹ்வின் தூதர் தனது தோழர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்கியிருக்காது என பதிலளித்தனர். இதே போன்று தான் ஐவேலை தொழுகையும் பாவங்கள் அனைத்தையும் கழுவி விடும்’ என கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையாளிக்கு சுவர்க்கத்தில் உயர் பதவிகள் கிடைக்குமென்ற நன்மாராயம்:

‘எவர் மஸ்ஜிதுக்கு எட்டுகளை வைத்துச் செல்கின்றாரோ (அல்லது மஸ்ஜிதுக்கு போய் திரும்புகின்றாரோ) அவர் செல்லும் பேதும், திரும்பும் போதும் வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்கத்தில் அவரது பதவிகள் உயர்தப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையாளியின் ஒவ்வொரு எட்டுக்கும் பாவங்கள மன்னிக்கப்படும், பதவிகள் உயரும் என்ற சுபச்செய்தி:   ‘ஒருவர் தனது வீட்டிலிருந்து வுழூச் செய்து, அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் ஏதாவது ஒரு மஸ்ஜிதுக்கு கடமையான தொழுகையை நிறைவேற்றும் என்னத்தில் எட்டுகளை எடுத்து வைப்பாரானால், அவர் வைக்கும் ஒரு எட்டுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், மற்ற எட்டுக்கு அவரது பதவிகள் (சுவர்கத்தில்) உயரும்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).

தொழுகைக்கு நேரகாலத்துடன் செலபவர்களுக்கு கிடைக்கும் நன்மாராயம்:

‘மக்கள் பாங்கின் மற்றும் முன் வரிசையின் சிறப்பை அறிந்துகொள்வார்களானால், சீட்டுக் குழுக்கி பார்பதன் மூலமே தவிர அந்த சந்தர்பத்தை மற்றவர்களுக்கு வழங்கமாட்டார்கள், தொழுகை;கு நேரகாலத்துடன் வருவதன் சிறப்பை அறிந்துகொளவார்களானால் அதற்கும் நேரகாலத்துடன் வந்திருப்பார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவரும் தொழுகையாளி தான் என்ற நன்மாராயம்:

‘உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பாரென்றால், அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார். அவன் தனது குடும்பத்தின் பக்கம் செல்வதை தொழுகையைத் தவிர வேறெதுவும் தடுக்கவில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

எவர் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமினுடன் நேர்பட்டுவிடுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்ற நற்செய்தி:

‘நீங்கள் ஆமீன் கூறும் போது வானிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர், அவர்களது ஆமீனுடன் உங்கள் ஆமீனும் நேர்பட்டு விடும்போது நீங்கள் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).

ஸுரதுல் பாஃதிஹாவின் இறுதியில் இமாம் ஆமீன் கூறுவார், அத்துடன் பின்னாலுள்ளவர்களும் ஆமீன் கூறுவார்கள் இந்த ஆமீனுடன் நேர் படுவதை தான் மேல் உள்ள ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

தொழுகையாளி அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் என்ற நற்செய்தி:

‘எவர் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுவாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).   தொழுகையாளிக்கு மறுமையில் முழுமைiயான பிரகாசம் என்ற நற்செய்தி:

‘இருள் நேரங்களில் மஸ்ஜிதை நோக்கி நடைபோட்டவர்களுக்கு நாளை மறுமையில் முழுமையான பிரகாசம் இருக்கின்றது என்று நன்மாராயம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அபூதாவுத், திர்மிதி).

பஃஜ்ர், அஸர் தொழுகைகளை நிறைவேற்றுபவருக்கு சுவர்க்கத்தைக்கொண்டு சுபச்செய்தி:

‘எவர் ஸுபஹ் மற்றும அஸர் தொழுகையை நிறைவேற்றி வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்’ என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி)
http://www.islamkalvi.com

0 கருத்துகள்: