கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ரயில் கட்டண உயர்வு ஜனவரி 21 நள்ளிரவு முதல் அமல்!


ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பவன் குமார் பன்சால் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் 21-ம் தேதி நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏறக்குறைய இன்னும் ஒருமாத காலம் இருக்கும் நிலையில் பயணிகள் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் இப்போதுதான் முதல்முறையாக பயணிகளுக்கான ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கி.மீ.க்கு குறைந்தபட்சம் 2 பைசா முதல் அதிகபட்சமாக 10 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.6,600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இரண்டாம் வகுப்பு புறநகர் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு புறநகர் அல்லாத ரயில்களுக்கான கட்டணம் கி.மீ.க்கு 3 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு கட்டணங்கள் கி.மீ.க்கு 4 பைசாவும், படுக்கை வசதிக்கு கி.மீ. 6 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏசி சேர் கார், ஏசி 3 அடுக்கு ஆகியவற்றுக்கு கி.மீ.க்கு 10 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் வகுப்புக் கட்டணம் கி.மீ.க்கு 3 பைசாவும், ஏசி இரண்டு அடுக்கு கட்டணம் கி.மீ.க்கு 6 பைசாவும், ஏசி முதல் வகுப்புக் கட்டணம் கி.மீ.க்கு 10 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பவன்குமார் பன்சால் மேலும் கூறியதாவது:

மக்கள் புரிந்துகொள்வார்கள் - பன்சால்: "ரயில் பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவற்றுக்கான செலவுகள், 6ஆவது சம்பள கமிஷனுக்கான நிதிச்சுமை, ரயில்வேயின் நிதிநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டண உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது.

ரயில்வே துறையை நவீனமயமாக்க இருக்கிறோம். இதற்காக மக்களும் கூடுதலாக கட்டணம் செலுத்தும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

எத்தகைய சூழ்நிலையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள்' என்றும் பன்சால் கூறினார்.

அதே நேரத்தில், சரக்குக் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலை அவர் தெரிவிக்கவில்லை. எனவே, ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

நஷ்டம் அதிகரிக்கிறது: ரயிலில் பயணிகள் பிரிவில் எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி விளக்கமளித்த பன்சால், "2004-05ஆம் ஆண்டில் ரயில்வே பயணிகள் பிரிவில் ரூ.1,059 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இது 2010-11ஆம் ஆண்டில் ரூ.19,964 கோடியாக அதிகரித்தது. நடப்பு நிதியாண்டில் இந்த இழப்பு ரூ.25 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றார்.

கட்டணத்தை உயர்த்தாத அமைச்சர்கள்: 2012ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பயணிகள் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார். ஆனால், அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலேயே இந்த உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. கட்சித் தலைவர் மம்தாவின் உத்தரவை அடுத்து தினேஷ் திரிவேதி பதவி விலகினார். அவரை அடுத்து ரயில்வே அமைச்சரான முகுல் ராய் கட்டண உயர்வைத் திரும்பப் பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

அதற்கு முன்பும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சர்களாக இருந்த லாலு பிரசாத், மம்தா பானர்ஜி ஆகியோரும் பயணிகள் கட்டணத்தில் கை வைக்கவில்லை.

மத்திய அரசின் ரெயில்வே கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
http://dinamani.com

0 கருத்துகள்: