கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பு: வேதனையில் தவிக்கும் டெல்டா விவசாயிகள்


காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதில் குறுவை சாகுபடிக்காக. மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறப்பது வழக்கம். போதிய தண்ணீர் இல்லாததால் செப்டம்பர் 17-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.

சம்பா, தாளடி சாகுபடியாவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவ மழையும் போதிய அளவு பெய்யாததாலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததாலும் அதுவும் கேள்விக்குறியானது.

தஞ்சை மாவட்டத்தில் நேரடி விதை, நடவுப்பணி, திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவுப்பணி என்று 80 ஆயிரம் எக்டேரில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் 10 ஆயிரம் எக்டேர் தாளடி நடவு ஆகும். தற்போது குளம் மற்றும் பம்புசெட் உள்ள பகுதிகளில் மட்டும் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 646 எக்டேரில் சம்பா நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. நேரடி நெல் விதைப்பு மூலம் 74 ஆயிரத்து 200 எக்டேரும், சாதாரண நடவு மூலம் 28 ஆயிரம் எக்டேரும், திருந்திய நெல் சாகுபடி மூலம் 29 ஆயிரம் எக்டேரும் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. 10 ஆயிரத்து 302 எக்டேரில் தாளடி நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன.

நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 820 எக்டேரில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. நேரடி நெல் விதைப்பு மூலம் 65 ஆயிரத்து 844 எக்டேரும், நடவுப்பணிகள் மூலம் 41 ஆயிரத்து 351 எக்டேரும், தாளடி மூலம் 12 ஆயிரத்து 624 எக்டேரும் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன.

மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாதால் சம்பா, தாளடி சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர். காவிரி டெல்டா விவ சாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 12 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 8 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. தற்போது 4 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டன. காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 80 லட்சம் பம்புசெட்டுகள் மூலம் நெற்பயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

தற்போது மின்சார பற்றாக்குறை காரணமாக 1 பம்பு செட்டுக்கு 2 ஏக்கர் வீதம் தான் நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். அப்படியே காப்பாற்றினாலும் இதன் மூலம் 50 சதவீதம் தான் மகசூல் கிடைக்கும். தமிழக அரசு தமிழகத்தில் உற்பத் தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கர்நாடகத்தில் உள்ள அணைகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு மத்திய பாதுகாப்பு படை மூலம் கண்காணித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும் என அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
http://www.maalaimalar.com/

0 கருத்துகள்: