கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

2015ல் "ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் தான்


தற்போது, புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளை, அடுத்த ஓராண்டு காலத்துக்கு, நீட்டித்து, அரசு உத்தரவிட்டாலும், 2014ம் ஆண்டும், இதே நடைமுறை தொடரும். 2015ம் ஆண்டில் தான், உடற்கூறு அடிப்படையிலான, "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' அமலுக்கு வர உள்ளது.

தமிழகத்தில், தற்போது, புழக்கத்தில் இருந்து வரும் ரேஷன் கார்டுகள், 2010ம் ஆண்டே, காலாவதியாகி விட்டன. 2011 மற்றும் 12ம் ஆண்டுகளுக்கு, ரேஷன் கார்டுகளில், கூடுதலாக, உள்தாள் இணைக்கப்பட்டு, கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த உள்தாள்களும், இந்த மாதத்துடன், முடிகின்றன.ஜனவரி, 1 முதல், பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், புதிதாக ரேஷன் கார்டுகளில், உள்தாள்கள் இணைக்கப்பட வேண்டும்.

இரண்டு மாதம்:இது தொடர்பாக, கடந்த வாரம், அரசு பிறப்பித்த உத்தரவில், "தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2013 ஜன., 1ம் தேதியில் இருந்து, டிச., 31 வரை நீட்டிக்கப்படுகிறது' என, அறிவித்துள்ளது. உள்தாட்களை அச்சடித்து, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வினியோகித்து, கார்டுகளில் ஒட்டும் பணி நிறைவடைய, அடுத்த, இரண்டு மாதங்களாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கார்டுகளின், செல்லத்தக்க காலம், ஓராண்டுக்கு, அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டாலும், அடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்தே, உள்தாள்களை வழங்க, அரசு, முடிவெடுத்துள்ளது. தற்போது, அச்சிட உள்ள, உட்தாள்கள், 2013 மற்றும் 2014ம் ஆண்டுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், புதிதாக, இனி ரேஷன் கார்டு வழங்கப்படும்போது, அது மின்னணு அம்சம் பொருந்தியதாகவே இருக்கும். தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின் அடிப்படையில், கண் கருவிழி, கைவிரல் ரேகை பதிவு கொண்ட, உடற்கூறு முறையிலான, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது.

கருவிழி பதிவு:தமிழகத்தில், தற்போது, கோவை உட்பட, பல மாவட்டங்களில் தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின்படி, கண் கருவிழி மற்றும் விரல் ரேகை பதிவுப் பணி நடந்து வருகிறது. முழுமையான கணக்கெடுப்புப் பணி முடிந்து, தகவல் தொகுப்பை பெற, குறைந்தபட்சம் ஓராண்டாகும். அதற்கு, பின் தான், ஸ்மாட் கார்டு, தயாரிப்பு பணிகளை துவங்க முடியும்.

தமிழகம் முழுவதும், 2015ல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு புழக்கத்துக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கு முன், முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், பரீட்சார்த்தமான முறையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குவதற்கான, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
Thanks: Dinamalar

0 கருத்துகள்: