கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இறைவனிடம் உரிமை கலந்த உறுதியுடன் கேட்க வேண்டும்

ஒரு வீட்டின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது. ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை அவனது தாய் கடுமையாக அடித்து, வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு, "எனது எந்த பேச்சையும் கேட்காத உன்னை இனி இந்த வீட்டில் நான் பார்க்க
 விரும்பவில்லை, எங்கு வேண்டுமென்றாலும் போய்த்தொலை" என்று விரட்டிவிட்டு படீரென்று கதவை சாத்திக்கொண்டாள்.

வாசலில் நின்று கொண்டு சிறுவன் தேம்பித்தேம்பி அழுதான். மெதுவாக அந்த தெருவின் முனை வரை சென்றவன் ஏதோ நினைத்தவனாக திரும்பவும் அந்த வீட்டின் வாசல் படியில் வந்து அமர்ந்தான். அழுதுகொண்டும், யோசித்துக்கொண்டும் இருந்தவன் சற்று நேரத்தில் அப்படியே வாசல் படியிலேயே படுத்து உறங்கி விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஏதோ வேலை நிமித்தமாக அவனது தாய், வீட்டின் வாசல் கதவைத் திறந்தாள். அடித்துத் துரத்தப்பட்ட மகன் வாசலில் படுத்துறங்குவதைப் பார்த்தவள் கோபத்துடன்; தூங்கிக்கொண்டிருந்த மகனின் தலைமுடியை பிடித்து இழுத்து தர தரவென்று அவ்விடத்தைவிட்டு அவனை அப்புறப்படுத்துவதில் முனைந்தாள். சிறுவன் ஒப்பாரி வைத்து கத்த ஆரம்பித்தான்.

தாயின் காலைப் பிடித்துக்கொண்டு "தாயே! உன்னை விட்டு விட்டு நான் எங்கே செல்ல முடியும்? நீ என்னை அடித்துத் துரத்தியபோது நானும் கோபத்தில், சரி! பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம் அல்லது எவரிடமாவது வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தேன். ஆனால், காசு பணம் சாப்பாடு எல்லாம் கிடைத்துவிட்டாலும் அம்மா! நீ எங்கு கிடைப்பாய்? உனது அன்பு எனக்கு வேறெங்கு கிடைக்கும்? இந்த வீட்டில் தானே உனது அன்பு எனக்குக் கிடைக்கும்! என்னை மன்னித்துவிடு! நான் இனிமேல் நீ சொல்வதைக் கேட்பேன்! என்னை சேர்த்துக்கொள்! உன்னைவிட்டு நான் எங்கே போக முடியும்? மீண்டும் என்னை துரத்திவிடாதே அம்மா!" என்று கெஞ்ச ஆரம்பித்தான்.

பெத்த மனம் பித்தல்லவா! அதன்பிறகு தாய் மனம் மாறி, "சரி! வா. என் போன்ற அன்பும் அரவணைப்பும் உனக்கு எங்கும் கிடைக்காது என்பதை உணர்ந்துவிட்டாயல்லாவா? இதோ வீடு உனக்காக திறந்துள்ளது. வா மகனே வா!" என்று அள்ளி அணைத்துக் கொண்டாள்.

இதுபோன்றுதான் தன்னைக் காப்பாற்றுவதற்கு எவருமில்லை எனும் இக்கட்டான நிலைக்கு மனிதன் ஆளாகும்போது அவனுக்கு; "உதவுவதற்கு இறைவனைத் தவிர வேறு எவரும் இல்லை, அவன் ஒருவனால் மட்டுமே தனக்கு உதவ முடியும்" எனும் எண்ணம் மேலோங்கும்போது அவனது நம்பிக்கை முழுக்க முழுக்க இறைவனை மட்டுமே சார்ந்திருக்கும்போது இறைவனது உதவி அவனுக்கு நிச்சயம் கிடைக்கும்.

அந்த சிறுவனுக்கு தனது தாய் எப்படியும் தன்னைச் சேர்த்துக்கொள்வாள் எனும் நம்பிக்கை உண்டானதால்தான் அவன் திரும்பவும் வீட்டு வாசலில் வந்து நின்றான். அதுபோல மனிதர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் மனம் திருந்தி இறைவனிடம் உரிமையோடும் முழு நம்பிக்கையோடும் மன்னிப்பு கேட்டு பிரார்த்தித்தால் அந்த ஏக இறைவன் தனது அடியானை ஒருபோதும் கைவிட மாட்டான்.

அல்லாஹ்; தாயைவிட எழுபது மடங்கு தன் அடியார்கள் மீது அன்புள்ளவன் என்பதை நினைவில் கொள்வோம்.
http://www.nidur.info/

0 கருத்துகள்: