கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இல்லம் என்பது அல்லாஹ் தனது அடியானுக்கு வழங்கி இருக்கின்ற அருட்கொடையாகும்.

     ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத் 
எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே, அவனை நாம் புகழ்கின்றோம், அவனிடம் உதவியும் தேடுகின்றோம், அவனிடமே மன்னிப்பும் கோருகின்றோம். நம்மிடம் உருவாகின்ற தீமைகளில் இருந்தும் இன்னும் தீமையான செயல்களிலிருந்தும் அவனிடமே நாம் பாதுகாப்புக் கோருகின்றோம். எவனொருவன்
அல்லாஹ்வினால் வழிகாட்டப்பட்டு விட்டானோ, அவரை எவரும் வழிகெடுத்து விட முடியாது, இன்னும் எவனொருவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனை யாரும் நேர்வழியில் செலுத்தி விட முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு ஒரு இறைவன் இல்லை என்று நான் சாட்சி பகர்கின்றோம், அவனுக்கு இணையுமில்லை அல்லது துணையுமில்லை, இன்னும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், இன்னும் தூதராகவும் இருக்கின்றார் என்றும் சான்று பகர்கின்றேன்.

இல்லம் என்பது அல்லாஹ் தனது அடியானுக்கு வழங்கி இருக்கின்ற அருட்கொடையாகும்.

இதனை அல்லாஹ் தனது திருமறை வாயிலாக நமக்கு இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றான் :

அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்;. (16:80)

இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : அருளாளனும் இன்னும் மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் தனது அடிமைகளுக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் குறித்து சுட்டிக் காட்டுகின்றான் : ''இல்லங்களை அவர்களுக்கு அமைதி வழங்கக் கூடிய தளமாக உருவாக்கித் தந்துள்ளான், அவர்களுக்கான புகலிடமாக அது அமைந்து அவர்களை மூடிக் கொள்கின்றது, இன்னும் அனைத்து வித நலன்களையும் அது அவர்களுக்கு வழங்குகின்றது.''

வீட்டின் மூலமாக நாம் பெற்றுக் கொள்வது தான் என்ன? உண்பதற்கும், மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவதற்கும், உறங்கவும், ஓய்வு எடுக்கவுமா? தனிமையில் இருந்து, மனைவியையும், பிள்ளைகளையும் சந்திக்கின்ற இடமா?

வீடுகள் பெண்களை பாதுகாக்கும் அரணாக அமைந்திருக்கின்றதில்லையா? அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் :

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள். (33:33)

உங்களைப் போல வீடில்லாதவர்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், சிறு அறைகளிலும் அல்லது தெருக்களிலும், அல்லது நிரந்திரமற்ற அகதி முகாம்களில் சிதறி வாழும் மக்களைப் பற்றிச் சிந்தித்தீர்களென்றால், உங்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற அருட்கொடையான இல்லத்தைப் பற்றி உணர்ந்து கொள்வீர்கள்.

வீடின்றி நாடோடி வாழ்க்கை வாழும் மக்களிடம் அவர்களது வாழ்க்கையின் அவலங்களைப் பற்றிக் கேட்டால், ''எனக்கென்ன வீடா இருக்கின்றது, நிரந்தரமாகத் தங்குவதற்கு'' என்று அங்கலாய்ப்பதனைக் கேட்பீர்கள். நான் சில வேளைகளில் இன்னார் வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்குவேன், இன்னும் சில நேரங்களில் டீக்கடைப் பெஞ்சுகளில் அல்லது பூங்காக்களில் அல்லது கடற்கரைகளில், இன்னும் என்னுடைய உடைகளோ தெருவோரம் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் மரப் பெட்டிகளில்..! வீடின்றிப் போனால் உங்களது நிலைமைகளும் இவ்வாறு தான் இருக்கும் என்பதை நீங்கள் அப்பொழுது உணர்ந்து கொள்வீர்கள்.

யூதர்களின் ஒரு குலத்தவர்களான பனூ நளீர் - களிடமிருந்து அல்லாஹ் தனது அருட்கொடைகளை எடுத்துக் கொண்டு விட்ட பொழுது, அவர்களை அவர்களது இல்லங்களிலிருந்து வெளியேற்றினான், இதனை அல்லாஹ் தனது திருமறையில் :

வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை.. .. .. (மேலும் அல்லாஹ் கூறுகின்றான்) : அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர். எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக. (59:2)

இறைநம்பிக்கையாளர்கள் தங்களது வீடுகளை சரியான வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட இல்லங்களாக மாற்றி அமைப்பதில் பல்வேறு நோக்கங்கள் இருக்கின்றன.

முதலாவதாக,

அவனையும், அவனது குடும்பத்தாரையும் நகர நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும், இன்னும் அவர்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தனது இல்லத்தை அவன் ஒழுங்கு செய்வது அவசியமாகின்றது :

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:6)

இரண்டாவதாக,

மரணத்தின் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற அந்த நாளில், தனக்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி குடும்பத் தலைவன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவான் என்ற மிகப் பெரும் பொறுப்பு அவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு மேய்ப்பாளரையும் (பொறுப்பாளரும்) அவனுடைய மந்தைகளைப் பற்றி (தன்மீது பொறுப்புச் சுமத்தப்பட்டவர்கள் பற்றி) அல்லாஹ் (மறுமை நாளில்) விசாரிப்பான், அதனை அவர் பாதுகாத்தாரா அல்லது அதனை உதாசினம் செய்தாரா, என்பது பற்றி ஒவ்வொரு மனிதரும் விசாரிக்கப்படாமல் இருக்க மாட்டார்.

மூன்றாவதாக,

இல்லம் என்பது ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் தளமாக இருக்கின்றது, தீமைகளில் இருந்து அவனையும், அவனது தீமைகளில் இருந்து மற்றவர்களையும் பாதுகாக்கின்றது. இன்னும் குழப்பமான நாட்களில் பாதுகாப்புத் தேடக் கூடிய இடமாகவும் அது திகழ்கின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''நாவினை (ப் பாதுகாத்து) கட்டுப்படுத்திக் கொள்வது அருட்கொடையாகும், (அத்தகையவருக்கு) அவருடைய இல்லம் போதுமானதாகும், இன்னும் (அவர் செய்து விட்ட) பாவங்களுக்கு மன்னிப்புக் கோரி அழுதவற்கும்.''

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஐந்து விஷயங்கள் இருக்கின்றன, எவர் அதனைப் பூர்த்தி செய்கின்றாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர், அல்லாஹ் அவனுடன் இருப்பான் : (அதாவது) நோயாளியைச் சென்று சந்தித்து (நலம் விசாரிப்பது), இறைவழிப் போருக்காக வீட்டை விட்டு வெளியே செல்வது, தவறினைத்திருத்திக் கொள்ள அல்லது மரியாதைக்காக தலைவரிடம் செல்வது, அல்லது அவர் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கட்டும், இதன் காரணமாக மக்கள் இவரிடமிருந்தும் இன்னும் இவர் மக்களிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளக் கூடும்.''

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''குழப்பமான நாட்களில் ஒரு மனிதனுக்குப் பாதுகாப்பானது (எதுவென்றால்) அவன் அவனது இல்லத்தில் தங்கி இருப்பது தான்.''

ஒருவன் தனக்கு நெருக்கமில்லாத அந்நிய தேசத்தில் அல்லது இடத்தில் இருக்கின்றான், அவனைச் சூழ இருக்கின்ற தீமைகளை அவனால் களைய முடியாது எனும் பொழுது கீழக்கண்ட ஆலோசனைகள் அவனுக்கு பிரயோஜனமாக இருப்பதைக் காண முடியும். அப்பொழுது அவன் தனது வீட்டில் அடைக்கலமாகி விடும் பொழுது, இஸ்லாம் தடை செய்திருக்கின்றவைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுடன் அல்லது தடுக்கப்பட்டவைகளைப் பார்ப்பதனின்றும், இன்னும் அலங்காரங்களை வெளியில் காட்டித் திரிவதனின்றும் தனது மனைவியையும், இன்னும் கெட்ட சகவாசத்திலிருந்து தனது பிள்ளைகளையும் பாதுகாக்கக் கூடிய தளமாக அவனது இல்லம் இருக்கும்.

நான்காவதாக,

மக்கள் அதிகமான நேரங்களைத் தங்களது இல்லத்திலிருந்து கொண்டு கழிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், குறிப்பாக கோடைகாலத்தின் பொழுது அல்லது குளிர்காலத்தின் பொழுது, மழை பெய்யும் பொழுது, அதிகாலை நேரத்தின் பொழுது அல்லது மாலை நேரத்தின் பொழுது, இன்னும் தங்களது அலுவல்கள் முடிந்த பின்பு அல்லது பள்ளிக் கூடங்கள் முடிந்ததன் பின்பு, எனவே இந்த நேரங்களை இறைவனை வணங்கக் கூடிய தளமாக, நினைவு கூரக் கூடிய தளமாக மாற்றிக் கொண்டு, இறைவன் ஆகுமானவற்றை அதில் தேடிப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், அவ்வாறில்லா விட்டால் உங்களது இருப்பிடம் இஸ்லாத்திற்கு முரணானவற்றை கழிக்கக் கூடிய தளமாக மாறி விட வாய்ப்புள்ளது.

ஐந்தாவதாக,

மிக முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொருவரும் தனது குடும்பத்தின் சீர்திருத்தத்தின் மீது அதிகக் கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒரு ஆரோக்யமான முஸ்லிம் சமூகத்தை உருவாக்க முனைய வேண்டும், ஏனென்றால், ஒரு சமுதாயம் என்பது குடும்பங்களின் தொகுப்பாகும், அதில் ஒவ்வொரு குடும்பமும் சமூகம் என்ற கட்டிடத்தின் செங்கலைப் போன்றதாகும். ஒரு குடும்பம் சீர்திருந்துவது அந்தக் குடும்பத்திற்கு அடுத்துள்ள சுற்றுப் புறத்தையும் சீர்திருத்துகின்றது, சுற்றப்புறமானது சமூகத்தை உருவாக்குகின்றது. சமூகம் என்ற கட்டிடத் தொகுப்பில் அமைந்துள்ள ஒவ்வொரு செங்கல்லும் உறுதியாக அமைந்து விட்டால், அந்த சமூகம் இறைச் சட்டத்தின் படி அமைக்கப்பட்டு விட்டால், எதிரிகளைச் சந்திக்கும் பொழுது அது உறுதியுடனிருக்கும் இன்னும் அதில் நன்மைகள் நிறைந்திருக்கும், தீமைகள் அதில் எளிதில் ஊடுறுவவும் இயலாததாகி விடும். இன்னும் இஸ்லாமியக் குடும்பம் என்பது சமூகம் என்ற கட்டிடத்தின் தூண்களைப் போல, அவை இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திடுகின்றன, இன்னும் சமூகத்தை நேர்வழியின்பால் இட்டுச் செல்கின்றன, மிகச் சிறந்த அழைப்பாளர்களாலும், அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாலும், இறைவழியில் போராடக் கூடிய தியாகம் படைத்தவர்களாலும், நேர்வழி பெற்றுக் கொண்ட மனைவியர்களாலும், சிறப்புக் கவனம் செலுத்தி அரவணைப்பு வழங்கக் கூடிய தாய்மார்களாலும், இன்னும் இது போன்ற பல்வேறு மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்டதாகவும் அந்த சமூகத் தொகுப்பு அமைந்திருக்க வேண்டும்.

கீழே நீங்கள் விரிவாகக் காணக் கூடிய அம்சங்கள் யாவும் மிகவும் முக்கியமானவை, நம்முடைய இல்லங்கள் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டவைகளாக இருக்கின்றன, அங்கு தீமைகளும் இன்னும் பொடுபோக்குத் தனங்களும், இவை யாவும் நம்மிடம் மிக முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்கின்றன :

நம்முடைய வீட்டினை இஸ்லாமிய மறுமலர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான வழிமுறைகள் என்ன?

மேற்கண்ட கேள்விக்கான விடையைக் கீழ்க்காணும் பகுதிகள் உங்களுக்கு வழங்கவிருக்கின்றன. அதன் பயன்களை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கட்டும், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய இல்லத்தை மறுசீரமைப்புச் செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொள்வதற்கு விரைவதற்கு அல்லாஹ் துணை நிற்கட்டும்.

கீழ்க்காணும் அறிவுரைகள் இருவிதமான நோக்கங்களைச் சுற்றியே வந்து கொண்டிருக்கும், ஒன்று நேர்மையானவற்றையும் இன்னும் நன்மையானவற்றையும் நிலைநிறுத்துவதும் இரண்டாவது, இன்னும் தீமைகளைத் தவிர்ப்பது, அந்தத் தீமைகள் உருவாகக் காரணமாகின்றவற்றையும் அல்லது நம்முடைய இல்லத்திற்குள் கொண்டு சேர்ப்பவற்றையும் .., இதுவே நம்முடைய நோக்கமுமாகும்.

 குறிப்பு: ஒவ்வொரு முஸ்லிம்களின் குடும்பத்திலும் இஸ்லாமியப் பேரொளி மிளிரவேண்டும் என்ற நல்ல நோக்கில் மரியாதைக்குரிய அறிஞர் ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத் அவர்களால் தொகுக்கப்பட்ட கட்டுரையே இது.
பல பயனுள்ள கருத்துக்களை தாங்கியுள்ள இந்த நீண்ட கட்டரையை தமிழாக்கம் செய்த சகோதரருக்கும், அறிஞர் ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத் அவர்களுக்கும் வல்ல அல்லாஹ் ஈரூலக பாக்கியங்களை நல்க பிராத்திற்கிறோம்.
தமிழ்இஸ்லாம்.காம் - சகோதரர்கள்
http://ottrumai.net/

0 கருத்துகள்: