கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தீராத விளையாட்டுப் பிள்ளை தண்ணீர், தீர்வென்ன தமிழகமே

தமிழக மக்களின் தாகம் தீர்க்கவும், தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பறவைகள், விலங்கினங்கள் துள்ளி விளையாடவும் வழி வகை செய்யும் ஆறுகளாக வற்றாத காவேரி, முல்லைபெரியார், பாலாறு, தாமரவரணி உள்ளன. அவை அத்தனையுமே கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநில எல்லையிலுள்ள மலைபகுதியிளிருந்து புறப்படுகின்றன. ஆனால் அவை அத்தனையுமே கடைசியில் சங்கமமாவது பெருங்கடலேயாகும்.
உப்புகரிக்கும் கடலில் மக்களுக்கும், பறவைகளுக்கும், வனவிலங்குகளுக்கும், வனங்களுக்கும், பயிர்களுக்கும், நதி நீர் கலந்து வீணாகக் கூடாது என்று தொலை நோக்குடன் இந்தியாவினை ஆண்ட பென்னி குய்க் போன்ற ஆங்கிலேயர் அரசு பணத்துடன், தங்கள் சொந்த சொத்தினை விற்று பல அணைகள் கட்டி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்த்தனர்.

தொலைநோக்கு பார்வை கொண்ட சோழ மன்னன் கரிகால் வளவன் காவரி நதிநீர் கரைபுரண்டு ஓடுவதினைத் தடுத்து 1900 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் கல்லனைக் கட்டினான். ஆகவே அவன் புகழ் இன்றும் நிலைத்துள்ளது. அசோக மன்னரை ஆங்கிலத்தில் 'தி கிரேட்' என்பார்கள். காரணம் மக்கள் பயனுக்காக ரோடுகள் அமைத்தும், மரங்கள் நட்டும், குளங்கள் வெட்டியதால் அவரை சிறந்த மன்னராக இன்றும் சரித்திரத்தில் புகழ் வாய்ந்தவராக கருதப் படுகிறார்.

அதுபோன்ற திட்டங்கள் தற்போதைய அரசுகளிடம் இல்லையே அது ஏன்?
ஒரே தெருவில் வாழும் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆளுக்கு ஒரு குடம் தண்ணீர் தெருக் குழாயில் பிடிப்பதிற்கு குடுமிப் பிடி சண்டை,

பக்கத்தில் இருக்கும் நிலத்தில் வாய்க்காலில் ஓடும் தண்ணீரை வயலுக்கு பாய்ச்சுவதில் சொந்த உடன் பிறப்பிற்குள் தள்ளு, முள்ளு, சம்பந்தம் செய்து கொள்ளும் பக்கத்துக் கிராமவாசிகள் வாய்க்காலில் ஓடும் தண்ணீரை தங்கள் கண்மாயில் நிரப்புவதிற்கு வெட்டுக் குத்து என்று ரத்தம் சிந்தும்போது, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா , ஆந்திரா மற்றும் கேரளா தமிழகத்துடன் சண்டை போடுவது ஆச்சரியமில்லை தானே!

ஏனென்றால் வல்லமைப் படைட்ட்தவன் போட்டியில் தன் வலிமையினை கடைசி வரை நிலை நிறுத்தப் பார்ப்பான் என்பது பொது நியதி.

அதனையே தான் கர்நாடகமும், ஆந்திராவும், கேரளாவும் தமிழ் நாட்டிடம் பம்மாத்துக் காட்டுகின்றன
.எனினும் அண்டை மாநிலங்களின் நதி நீர்ப் பிரச்சினையில் மத்திய அரசும், உச்ச நீதி மன்றமும் ஒரு உறுதியான முடிவினை எடுக்க முடியவில்லையே என்று பார்க்கும் பொது பரிதாப நிலையாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

வியாபாரிகளாக வந்த ஆங்கிலேயர்கள் குறு மாநிலங்களாக இருந்த இந்திய தேசத்தினை தன் கட்டுப் பாடுகள் கொண்டு வந்து பிரிட்டிஷ் சாம்ராஜியதினை நிலை நாட்ட தங்களுடைய ராணுவ தளவாடங்களை பல பகுதிகளுக்குக் கொண்டு செல்ல நீண்ட ரயில் பாதைகளை வனப்பகுதிகளிலும், மலையினைக் குடைந்தும் அமைக்கவில்லையா?

அதேபோன்று சுதந்திர இந்தியாவில் வட மாநிலங்களில் ஓடும் வற்றாத கங்கை, பிரமபுத்ர நதிகளை வரண்ட தென் மாநிலங்களுக்கு ஏன் கொண்டு செல்ல முடியவில்லை என்ற கேள்வி உங்களுக்கு எழாமலில்லைதானே? அதற்கு தேசிய அரசியல் வாதிகள் சொல்லும் நொண்டிச் சாக்கு, இயற்கைச் சூழல் கெட்டு விடுமாம். அவ்வாறு ஆங்கிலேயர்கள் நினைத்து இருந்தால் இந்தியாவினை இணைக்கும் தண்டவாளங்களை அமைத்து இருக்க மாட்டார்களே!

ஏன் வாஜ்பாய் பிரதமாராக இருந்த போது உருவாக்கப் பட்ட 'தங்க நாற்காலி' என்ற நான்கு வழி ரோடு அமைக்கும் திட்டம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஏற்பட்டிருக்காதே!

சென்னை,ஹைதராபாத் இடையே உள்ள தூரம் 664 கிலோ மீட்டர்.
அதனிடையே தனி ரயில் பாதை அமைத்து ஜப்பானில் உள்ளதுபோல் புல்லெட்ரயில் இயக்க திட்டமிட்டு கன்சல்டன்சிக்கு ஷிஹான் என்ற ஜப்பான் கம்பெனிக்கு மூன்றக்கோடி முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அப்படி பாதை அமைக்க ஒரு கிலோ
மீட்டருக்கான செலவு ரூபாய் நூறு கோடியாம். அப்படி என்றால் புல்லெட் ரயில் அமைக்க ரூபாய் 66400 கோடியாகுமாம். அதுபோன்ற திட்டங்கள் செயல் படுத்தும் போது சுற்றுப்புற சூழல் கெடாதா?


மக்கள் வறட்சியால் பட்டினியில் வாடும்போது 'நதிகளை இணைத்தால் இயற்கை சூழல் பாதிக்கும்' என்பது கை எழாதவர் சொல்லும் நொண்டிச் சாக்காக சொல்லுவது போல உங்களுக்குத் தெரிய வில்லையா?
மேலை நாடுகளில் அதுபோன்று நதிகளை இணைத்து மக்களுக்கு பயன் படும் வகையில் செய்துள்ளார்களே! உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஓடும் கொலோரோடோ நதி அமெரிக்காவின் கலிபோர்னியா, நவேடா மாநிலங்களோடு பக்கத்து நாடான மெக்ஸிகோவிற்கும் செல்கின்றதே,. ஏன் இந்தியாவில் ஓடும் பிரமபுத்ர நதி அண்டை நாடான பங்களாதேசுடன் பகிர்ந்து கொள்ள வில்லையா? பின் ஏன் வட மாநில நதிகளை தென் மாநிலங்களுடன் இணைக்கக் கூடாது? ஏன் வற்றாத நதிகளை தேசிய மயமாக்கக் கூடாது?
கர்நாடகமும், ஆந்திராவும், கேரளாவும் முடிந்த மட்டும் காவேரி, பாலாறு, முல்லைபெரியார் நதிகளை தங்கள் கட்டுப் பாடுகள் வைத்துக் கொள்ளும் முயற்ச்சியில் இறங்கி உள்ளன என்று சமீப கால நடவடிக்கைகள் எடுத்தியம்புகின்றன. அதனை அடுத்து நமது பரபரப்பு அரசியல் வாதிகள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், வன்முறை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களால் அண்டை மாநில மக்கள் ஒருவருக்கொருவர் மனக் கசப்புடனும், அச்ச உணர்வுடனும் வாழ்கின்றனர். நாட்டினை துண்டு போடத் துடிக்கும் சில பிரிவினை வாத சக்திகள் இதனை ஒரு சக்கரைப் பொங்கலாக எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடு படுகின்றனர். எரியும் நெருப்பில் என்னை ஊற்றுவது போல சில ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன
ஆனால் நாம் தண்ணீர் வளத்தினை பெருக்க எடுத்துக் கொண்ட முயற்ச்சிகள் பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா?

சமீப காலமாக வானம் பொத்துக் கொண்டு கொட்டோ கொட்டு என்று மழை பொழிந்து தள்ளியது. அதன் விளைவாக ஆறுகளின் கரையோர கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. கூரைகள் காற்றில் பறந்தது, வீதிகளில் இடுப்பளவு தண்ணீர் நின்றது, போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெள்ளத்தால், அடை மழையால் வீதிகளில் ஓட்டை விழுந்தது, ஆற்றின் கரையோர மக்கள் திருப்பூர் போல பலர் அடித்துச் செல்லப் பட்டனர். ஆனால் மழைக் காலத்திலாவது அனைத்து கிராமங்களிலும் கண்மாய்கள், குளங்கள் நிறைந்ததா என்றால் இல்லையே!

பின் எங்கே சென்றது அத்தனை தண்ணீரும் என்று உங்கள் மனதில் கேள்வி எழுவது இயற்கைதானே!

கடலிலிருந்து மேகமாகி மழையாகி அந்த மழை வெள்ளமாகி கடலில் சங்கமானது தான் மிச்சம்.;

மழைக் காலத்தில் மழை நீரை சேமித்து வைக்காது பல்வேறு அணைகளின் உபரி நீரை திறந்து பல மக்களுக்கு இன்னல் ஏற்பட்டு கடலில் போய் சேர்ந்தது என்றால் வருத்தமாகத்

தெரியவில்லையா?
அதற்கு வழிதான் என்ன என உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.

கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் மழை காலத்தில் தண்ணீர் வீனாகுவதினைத் தடுக்கலாம்.
1) காவேரி, பாலாறு வைகை, முல்லைப் பெரியார் ஆறுகளின் பாதைகளில் மழை காலத்தில் திறந்து விடப்படும் உபரி நீரை ஏன் 'செக் டாம்ஸ்' கட்டி விவசாயிகளின் பயனுக்காக சேமித்து வைக்கக் கூடாது. அது போன்ற 15 டாம்ஸ் பாலாற்றில் ஆந்திரா மாநிலம் கட்டிவிட்டு மறுபடியும் ஒரு டாம்சை கணேசபுரத்தில் கட்டத்துவங்கி உள்ளதாக கூறப்படுகிறதே!
2) அது போன்ற அணை மதுரை டூ ராமேஸ்வரம் சாலையில் விரகனூரில் கட்டியதால் அதன் சுற்று ஊர்களின் விவசாயிகள் பயன் அடைந்திருக்கிறார்களே!
3) ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள் மழை காலத்தில் நிரம்பிவிடும். ஆனால் ஆற்றினை விட்டு பாத்து மைல்களுக்கு மேலுள்ள கண்மாய், குளங்கள் நிறையாது. ஏனென்றால் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால் மண் மேவியும், காட்டுச் செடிகளினாலும் தூந்து போய் இருக்கும். அப்படிப் பட்ட கால்வாய்களை மழைக்கு முன் தூர் எடுத்தால் தான் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இல்லையென்றால் அடை மழை பெய்தாலும் அப்படிப் பட்ட குளங்களும், கண்மாய்களும் நிறையாது. உதாரணத்திற்கு எங்கள் ஊர் இளையான்குடி கண்மாய்க்கு இந்த மழை சீசனிலும் தண்ணீர் வைகை ஆற்றிலிருந்து வரவில்லை. ஆகவே இளைஞர் பலர் ஒரு வாரம் ராத்திரி பகல் என்று பாராது கால்வாயினை தூரெடுத்து பதிமூன்று தொலைவிலுள்ள பரமக்குடியிலிருந்து எங்களூர் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். இப்போது ஆர்ப்பாட்டம், நடை பயணம், மறியல் செய்யும் ஆயிரகணக்கான இளைஞர்கள் கரை சேவையின் மூலம் தூந்த வாய்க்கால்களை தூரேடுக்கலாமே!
அல்லது மத்திய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை பயன் படுத்தி வேலை இல்ல இளைஞர்கள் கண்மாய், குளங்களை தூரேடுக்கும் பணியில் ஈடு படுத்தலாமே

கண்மாய்களை தூரேடுக்கலாம். மற்றும் கண்மாயில், குளங்களில் கிணறுகள் வெட்டி சிமென்ட் உரைகள் அடுக்கி கொஞ்சம் நஞ்ச நீரையும் வெயில் நேரங்களில் ஆவியாகப் போகாது மக்கள் உபயோகத்திற்காக ஏற்பாடு செய்யலாம்.

4) தமிழலகத்தில் எண்ணற்ற காட்டாறுகள் உள்ளன. ஆனால் மழை காலத்தில் மழை நீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு கடலில் கலந்து விடும். ஆகவே அரசு புறம்போக்கு நிலங்களில் புதிய குளங்கள், கண்மாய் வெட்டி தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது?
5) ஏற்கனவே வீடுகளில் மழை நீர் சேமிப்பு திட்டம் தமிழகத்தில் உள்ளது. அதன் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் வீதி, நகரங்களில் ஓடும் மழை நீரால் ரோடுகள் பள்ளமானதும், இடுப்பளவு தண்ணீரில் மக்கள் கஷ்டப் பட்டதும் தான் மிச்சம். ஆஸ்திரேலிய நாட்டில், வீட்டில் புழங்கும் கழிவு நீரைக்கூட மறுசுழற்சி முறையில் வீடுகளின் பயன்பாடு களுக்கு பைப்புகள் மூலம் வழங்குகிறார்கள். பின் ஏன் நாமும் மழை காலத்தில் நகரங்களில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்தப் படுத்தி சேகரித்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கக் கூடாது? கடல் நீரை குடி நீராகப் பயன்படுத்தும் திட்டத்தினை விட மிகவும் செலவு குறைவானதாகுமே!
ஆகவே நதி நீர்களை தேசிய மயமாக்கும் வரை, மாநிலங்களின் நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு கண்டிப்பான முடிவு எடுக்காத வரை, நீதி மன்றங்கள் நதி நீர் பங்கீடில் உறுதியான அமல் செய்யக்கூடிய தீர்ப்பு வழங்காத வரை நமது மாநிலத்தில் நதிநீர் பிரச்சனை தீராத பிள்ளையாகவே இருக்கும். ஆகவே நாம் மாற்று திட்டங்கள் மூலம் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும், பறவை, விலங்கினங்கள் பயன்பாடிக்கும் விரைந்து மாற்று திட்டங்களை உருவாகியே தீர வேண்டும் என்பது சரிதானே சகோதர சகோதரிகளே!
http://mdaliips.blogspot.com/2011/12/blog-post.html

0 கருத்துகள்: