கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குர்ஆனிய பாடம்: இறைநம்பிக்கையின் பலம்

faith
நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே கடவுளாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.
இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது. எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் இருப்பதால் அவனை கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இல்லை. இதனை தான் வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது.
இன்று நாமும் இறைநம்பிக்கை கொண்டுள்ளோம். நம்மில் பலருக்கு இந்த இறைநம்பிக்கை என்னும் பரிசு மிகவும் எளிதாக கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. எளிதாக கிடைத்ததால் தான் என்னவோ நாம் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்! இதனால்தான் நமக்கு பல படிப்பினைகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான். குர்ஆனிலும் சான்றோர்களின் வாழ்க்கையிலும் இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனின் ஒரு சம்பவம் இறை நம்பிக்கையின் பலம், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது.
நபி மூஸா(அலை) அவர்கள் இறைவனின் செய்தியை பெற்றுக் கொண்டு அதனை அப்போதைய அரசனாக இருந்த பிர்அவ்னிடம் கொண்டு செல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக வைத்து அனுபவித்து கொண்டிருப்பவனுக்கு அல்லாஹ் மட்டும்தான் கடவுள் என்பதை ஜீரனிக்க முடியவில்லை. ‘நீர் கொண்டு வந்திருக்கும் அத்தாட்சி எதையும் காட்டும்’ என்று முதலில் கேட்டான். மூஸா(அலை) தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது பெரிய பாம்பாகிவிட்டது. தனது கையை சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது. பிர்அவ்னின் மனது உண்மையை ஏற்க மறுத்தது. அவனது துதிபாடிகளும் ‘இவர் ஒரு திறமையான சூனியக்காரர்’ என்று கூறினர். ‘இவரை எவ்வாறு எதிர்கொள்வது?’ என்று தனது சகாக்களுடன் ஆலோசணை செய்தான். ‘நமது நாட்டின் திறமையான சூனியக்காரர்கள் அனைவருக்கும் அறிவிப்பு கொடு. அவர்கள் இவருடன் போட்டியிட்டும்’ என்று கூறினர் சகாக்கள்.
வந்த சூனியக்காரர்கள் போட்டி ஆரம்பம் ஆவதுற்கு முன் தெளிவாக ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டார்கள். ‘மூஸாவை வென்றுவிட்டால் அதற்குரிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமல்லவா?’ என்று கேட்டார்கள். தங்கள் சூனியத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்தது. பிர்அவ்னும் வாக்குறுதியை கொடுத்தான். ‘நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்’ என்றான். இதை விட வேறு என்ன வேண்டும்? ஆட்சியை கையில் வைத்திருப்பவனுக்கு நெருக்கமாகி விட்டால் விரும்பியது எல்லாம் கிடைக்குமே. அதிகாரத்தை பயன்படுத்தி நாமும் சிறிது ஆட்டம் போடலாமே.. இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்தால் அந்த சூனியக்காரர்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
பிர்அவ்னின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகத்தில் போட்டியில் குதித்தனர். தங்களின் தடிகளை எறிந்து மக்களின் கண்களை மயக்கி மகத்தான சூனியத்தை செய்தனர். வெற்றியின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக அவர்கள் உணர்ந்த போது, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களை தடியை எறியுமாறு அறிவித்தான். எறிந்தவுடன் அது பெரிய பாம்பாகி அவர்களின் கற்பனைகள் அனைத்தையும் விழுங்கி விட்டது. சூனியக்கலையில் ஜாம்பவான்களாக இருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தங்களின் சூனியங்கள் வீணாகி விட்டதை உணர்ந்த அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். தாங்கள் சிறுமைபடுத்தப்பட்டதையும் உணர்ந்தனர்.
தோல்வியை கண்டவர்கள் அத்துடன் நிற்கவில்லை. இத்தனை காலம் தாங்கள் செய்து வந்த சூனியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதையும் உணர்ந்தனர். மூஸா என்ற சாதாரண மனிதரால் இதனை செய்திருக்க முடியாது. அவருக்கு மேலாக ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தார்கள். தங்களின் சக்திகளுக்கெல்லாம் மேலான சக்தி பெற்றவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதையும் அறிந்தனர். தங்களின் சூனியத்தின் மீது நம்பிக்கை கொண்ட பிர்அவ்னை விட அல்லாஹ்தான் உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டனர். உணர்ந்தவர்கள் உடனே உரக்க உரைத்தனர், ‘அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவன் ஆவான்’ அதுவரை நிராகரிப்பின் பக்கம் இருந்தவர்கள், அல்லாஹ்வின் வல்லமையை கண்டவுடன் சரண் அடைந்தனர்.
தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூனியக்காரர்கள் மூஸாவின் பக்கம் சென்றதை பிர்அவ்ன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்னரே நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? இது மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சி என்று கூறினான். எஞ்சியிருக்கும் மக்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த பிர்அவ்ன் அராஜகத்தின் பக்கம் திரும்பினான். புதிதாக நம்பிக்கை கொண்ட அந்த மக்களை நோக்கி ‘உங்கள் அனைவரையும் மாறு கை மாறு கால் வாங்கி சிலுவையில் அறைவேன்’ என்று பயமுறுத்தினான். இப்போது தானே நம்பிக்கை கொண்டார்கள், சிறிது பயம் காட்டினால் மீண்டும் நம் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்தான் போலும்.
ஆனால் அந்த மக்களோ மிகவும் உறுதியாக இருந்தார்கள். ‘நாங்கள் எங்கள் இரட்சகனின் பக்கமே திரும்ப செல்வோம். அவனது அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காக நீ எங்களை பழி வாங்குகிறாய்’ என்ற தெளிவாக கூறினார்கள். தங்களின் நம்பிக்கையில் தாங்கள் உறுதியாக இருக்க இறைவனிடம் ஒரு பிரார்த்தனையும் செய்தார்கள். ‘எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்களை கைப்பற்றி கொள்வாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
மூஸாவை தோற்கடிக்க வேண்டும், பிர்அவ்னுக்கு நெருக்கமானவர்களாக ஆக வேண்டும் என்று விரும்பிய மக்கள், அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து அவனை நம்பிக்கை கொண்ட பிறகு அப்படியே மாறிவிட்டார்கள். பிர்அவ்னின் நெருக்கத்தை விட அல்லாஹ்வின் நெருக்கத்தை தேர்ந்தெடுத்தார்கள். பிர்அவ்னிடம் கொள்ளும் நெருக்கமானது சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும், ஆனால் அல்லாஹ்வின் நெருக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்தார்கள்.
அல்லாஹ்வின் நம்பிக்கை மனதில் வந்த பிறகு வேறு எந்த சக்திக்கும் அவர்கள் அடிபணிபவர்களாக இல்லை. பிர்அவ்னின் குணத்தையும் அவனது கொடூரத்தையும் நேரடியாக கண்டவர்கள். அதிகார மமதையில் எதை வேண்டுமென்றாலும் செய்வான் என்பதையும் அறிந்தே வைத்திருந்தார்கள். அதுவரை அவன் முன் குனிந்து நின்றவர்கள், இறைநம்பிக்கை வந்தவுடன் அவனுக்கெதிராக உறுதியாக நின்றார்கள். தங்களின் நம்பிக்கையும் உறுதியும் தங்களின் உயிரை பறிக்கும் என்பதை அறிந்த பிறகும் அதற்கு அவர்கள் கவலைபடவில்லை.
பிர்அவ்ன் கொடுக்கும் தண்டனை சில நிமிடங்களிலோ அல்லது மாதங்களிலோ முடிந்து விடும். ஆனால் பிர்அவ்னுக்கு கட்டுப்பட்டால் நிலையான மறுமையில் நிரந்தரமான வேதனையை அனுபவிக்க வேண்டுமே என்ற பயம் அவர்கள் மனதில் இருந்தது. நிலையற்ற உலகத்தை விட நிலையான மறுமையை தேர்ந்தெடுத்தார்கள். எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவியின்றி எதையும் செய்ய முடியாது. எனவேதான் தங்களுக்கு உறுதியை வழங்குமாறு பிரார்த்தனையும் செய்தார்கள்.
இதுதான் சூனியக்காரர்களாக வந்து இறை நம்பிக்கையாளர்களாக மாறியவர்களின் சம்பவம். இறைநம்பிக்கை மனதிற்கு சென்றால் என்னவெல்லாம் செய்யும் என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லித் தருகிறது. நமது இறை நம்பிக்கையை சற்று உரசிப் பார்ப்போமா?
-:ஏர்வை ரியாஸ்:-

0 கருத்துகள்: