கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கரை சேருமா லோக்பால் மசோதா? - ஒரு அலசல்.

காந்திய வழி போராட்டமே மக்களுக்கு வெற்றியை தேடித்தரும் என்பது இந்திய சுதந்திரத்தின் மூலம் உறுதியானது. பல நாடுகளில் இப்பாதை உதவியது. அதனால்த்தான் காந்தி உலக மக்களளால் மதிக்கப்படுகிறார். எகிப்தில் நடந்த மக்கள் புரட்சி வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் காந்திய வழி போராட்டமே எக்காலத்திற்கும் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணி அரசில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல், மகாராஷ்டிராவில் ஆதர்ஷ்  வீட்டு வசதி சங்க ஊழல், ராணுவ நில ஊழல், காமன் வெல்த் கேம் ஊழல், கருப்பு பண விவகாரம், இஸ்ரோவின் S-பாண்ட் ஊழல் என தொடர் ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராஜாவை தவிர இந்த ஊழல்களில் தொடர்புடைய எந்த அரசியல்வாதியையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2G வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதால்த்தான் வெறு வழியின்றி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.


சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஊழல் செய்த எந்த அரசியல்வாதியும், அதற்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரியும் தண்டிக்கப்படவே இல்லை. காரணம் தாங்கள் தப்பித்துக்கொளும் வகையிலேயே இந்த ஊழல் அரசியல்வாதிகள் சட்டத்தை பல் பிடுங்கிய பாம்பாக ஆக்கியதே .

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தண்டிக்க  வகை செய்யும் சட்டத்திற்கான மசோதாவை சுமார் பத்து தடவை கொண்டு வந்து நிறைவேற்ற முடியாமல் போனது. இவர்கள் தயார் செய்த மசோதா வெறும் கண் துடைப்பே. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், தங்களை தண்டிக்கும் வகையில்  ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வருவார்களா?

சமீப காலமாக கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு லட்சம் கோடி என ஊழல்கள் விசுபரூபம் எடுக்க, வெறுத்துப்போன நாம் செய்வதறியாமல் அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டோம். ஏற்கனவே பல முறை ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மற்றும் லோக் அயுக்த்தா சட்டத்தை நிறைவேற்றுங்கள் என பொது மக்கள் சார்பாக காந்தியவாதியும் சமூக நல ஆர்வலருமாகிய அன்னாஹசாரே, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தற்பொழுது கர்நாடகாவில் லோக் அயுக்தாவின் தலைவருமான சந்தோஷ் ஹெக்டே மற்றும் பரிவர்த்தன் போன்ற பல பொது நல அமைப்புகள் மத்திய அரசிடம் கூறி வந்தன. ஆனால் அரசு தண்ணி காட்டி வந்தது. இந் நிலையில்தான் அன்னாஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால், (RTI ACTIVIST) கிரன்பேடி (ஐ.பி.எஸ்) , சுவாமி அக்கினிவேஷ் ஆகியோர் ஒருங்கிணைந்து, லோக்பால் சட்டத்தை கொண்டுவர, அரசை வலியுறுத்தி "சாகும் வரை உண்ணாவிரதம்" என்ற போராட்டத்தை துவக்க போவதாக அறிவித்தனர். அதன்படி அன்னாஹசாரேயின் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் உண்ணாவிரதத்தை ஏப்ரல் 5-ம் தேதியன்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் துவங்கினர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என சமுதாய அந்தஸ்து, ஜாதி, மத பாகுபாடு இன்றி ஆயிரக்கணக்கில் மக்கள்  உண்ணாவிரத போராட்டத்திற்கு அதராவாக அங்கு குவிந்தனர். எல்லா மாநிலங்களிலும் ஆதவாக மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஆதரவு தெரிவித்தனர். வரைவு மசோதா தயாரிக்கும் குழுவில் சட்டப்படி அமைச்சர்களே பங்கேற்கமுடியும் என விதண்டா விவாதம் செய்த அரசு மக்களின் எழுச்சியை கண்டு தன் நிலைப்பாட்டை மாற்றி 10 நபர்கள் கொண்ட கமிட்டியில் 5 பொதுமக்களும் (சிவில் சொசைட்டியை சேர்ந்தவர்களும்), 5அமைச்சர்களும் பங்கேற்க சம்மதித்தது. மேலும் தாங்கள் சேர்மன் நியமிப்பதை போலவே, கோ- சேர்மனை நியமிக்க போராட்ட குழுவினர் (மக்கள்) நியமிக்கவும் சம்மதித்தது. அதன் படி ஏப்ரல் 9-ம் தேதி அரசாணை, கெஸட்டில் வெளியிட்டது. அதன் பின் அன்னாஹசாரே உண்ணாவிரதத்தை முடித்தார்.

வரைவு மசோதவை தயாரிக்கும் கமிட்டி அங்கத்தினர்கள்.

ஏற்கனவே தாங்கள் தயாரித்துள்ள வரைவு மசோதாவை அன்னா ஹசேராவுக்கு வழங்கியுள்ளது. அதைப்போலவே அன்னா ஹசேரா தங்கள் குழு தயாரித்துள்ள வரைவு மசோதவை அரசிடம் கொடுத்துள்ளது. அரசு தங்கள் தரப்பில் பிரனாப் முகர்ஜியை சேர்மன் ஆகவும், சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபல், குர்ஷித் ஆகியோரை அங்கத்தினராகவும் நியமித்துள்ளது. அன்னா ஹசாரே பொதுமக்கள் தரப்பில் ஷாந்தி பூஷனை கோ-சேர்மனாகவும், பிரஷாந்த் பூஷன், அர்விந்த் கெஜ்ரிவால், சந்தோஷ் ஹெக்டே மற்றும் தான் உட்பட நால்வரை அங்கத்தினராகவும் அறிவித்துள்ளார். இந்த கமிட்டி ஜூன்30-ம் தேதிக்குள்  வரைவு மசோதாவை தயாரித்து, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அதை நிறைவேற்ற உள்ளது. இவைதான் இன்றைய நிலை.

இனி அரசின் வரைவு மசோதாவிற்கும் பொதுமக்கள் தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவிற்கும் உள்ள வேறுபாடுகளை கீழே பார்ப்போம்.

அரசின் வரைவு மசோதா.

1.  பொதுமக்கள் மத்திய அரசு சம்பந்தப்பட்ட புகார்களை பாராளுமன்ற சபாநாயகருக்கு (லோக் சபா / ராஜ்ய சபா) அனுப்பவேண்டும். அவர் விருப்பப்பட்டால் அந்த புகார் விசாரணைக்கு லோக்பால் அமைப்புக்கு அனுப்பப்படும். 

(நம் பாராளுமன்ற நடைமுறையின் படி ஆளும் கட்சி எம்.பி-யே சபாநாயகராக இருப்பார். அவர் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே செயல்படுவார்)

2. லோக்பால் ஒரு ஆலோசனை கூறும் அமைப்பு மட்டுமே. தன் விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பவேண்டும். அதன் மீது நடவடிக்கை எடுப்பதும் புறக்கணிப்பதும் அவர் அதிகாரத்திற்குட்பட்டது. அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு பிரதமர் தான் முடிவெடுப்பார். பிரதமர் மற்றும் எம்.பிக்கள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு சபாநாயகர் முடிவெடுப்பார்.

(அமைச்சர்கள் அனைவரும் ஆளும் கட்சி அல்லது கூட்டணியை சார்ந்தவர்களாகவே இருப்பர். எனவே  பிரதமர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பே கிடையாது.) 


3.லோக்பால் அமைப்பிற்கு, முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யும் (காவல்துறைக்குள்ள) அதிகாரம் கிடையாது.


யார் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்வார்கள்?, அந்த வழக்குக்காக வழக்கறிஞரை நியமிப்பது யார்? அந்த வழக்கை நடத்த வேண்டியவர் யார் என்பது பற்றி விளக்கம் இல்லை.  இது சட்டமாக்கப்பட்ட பின் சி.பி.ஐ எப்படி செயல்படும்?, ஒரே வழக்கை சி.பி.ஐ மற்றும் லோக்பால் இரண்டுமே புலனாய்வு செய்யும் அதிகாரம் உண்டா? என்பது பற்றிய தகவல் இல்லை. 

4. லோக்பால் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் புகார் தவறானதாக இருக்கும் பட்சத்தில் மனுதாரருக்கு சிறைத்தண்டனை வழங்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு. அதே நேரத்தில் புகார் சரியானது என நிருபிக்கப்பட்டால் ஊழல் செய்தவரை தண்டிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு கிடையாது.


இந்த சட்டத்தின் மூலம் லோக்பால் அமைப்பு, ஊழல்வாதியை தண்டிக்க முடியாது. அதேசமயம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்களின் ஊக்கத்தையும் நடவடிக்கையையும் சிதைக்கும் வகையில் அவர்களுக்கு சிறைதண்டனை வழங்கும். இது அச்சுறுத்தல் நடவடிக்கையே! 

5. இந்த சட்டத்தில் பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான புகார்களை மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு உண்டு. இதில் அதிகாரிகள் உட்படமாட்டார்கள்

பெரும்பாலும், அரசியல்வாதிகளும் உயர்மட்ட அதிகாரிகளும் சேர்ந்தே ஊழல் செய்ய முடியும். இதுபோன்ற வழக்குகளில் லோக்பால் அரசியல் வாதிகளையும், சி.வி.சி அதிகாரிகளையும் விசாரிக்கவேண்டும். ஆனால் லோக்பாலுக்கும் சிவிசிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஒரே வழக்கில் இவ்விரண்டு அமைப்பும், புலன்விசாரணைக்கு பின் எதிரும் புதிருமாக  முடிவெடுத்தால் அந்த வழக்கே செத்துவிடும்.

6. லோக்பால் அமைப்பின் உருப்பினர்கள் மூவர். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற நீதிபதிகள்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளை மட்டுமே தேர்வு செய்வதற்கான காரணம் கூறப்படவில்லை. மேலும் இது போன்ற பதவிகளை ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு உருவாக்குவதன் மூலம், ஓய்வு பெறும் முன்பே , நீதிபதிகள் இப்பதவிகளை பெறுவதற்காக பணிகாலத்திலேயே அரசின் விருப்பப்படி நடக்கும் நிலை ஏற்படும்.

7. இவர்களை தேர்ந்தெடுக்கும் கமிட்டி உப ஜனாதிபதி, பிரதமர், இரு அவைகளின் சபாநாயகர்கள், இரு அவைகளின் எதிகட்சி தலைவர்கள், சட்ட அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்களை கொண்டதாக இருக்கும்.     


இந்த கமிட்டியில் உபஜனாதிபதியை தவிர அனைவரும் அரசியல்வாதிகளே!. இவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக செயல்படுபவராகவே இருக்க வாய்ப்பு உண்டு. இது இச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது.

8.  லோக்பால் அமைப்புக்கு பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் கிடையாது.

இதனால் வெளியுறவு, பாதுகாப்பு, ராணுவம் சம்பந்தப்பட்ட ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம் இல்லை. 

9. ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் வழக்கு விசாரணை முடிய வேண்டும். 

எவ்வளவு காலத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்ற கால கெடு நிர்ணயிக்கப்படவில்லை.

அரசின் இந்த வரைவு மசோதா சட்டமாக்கப்படுவதன் மூலம் 1% ஊழலை கூட ஒழிக்க முடியாது. இது அரசியல் வாதிகளின் கண் துடைப்பு நாடகமே!

 அன்னாஹசாரேயின் வரைவு மசோதா

1. பொதுமக்கள் புகாரை நேரடியாக பெற்று அல்லது செய்திகளின் அடிப்படையில் தாமாகவே (suo moto) வழக்கை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு.

2. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்று லோக்பால், அரசு கட்டுப்பாட்டில் இல்லாத தனி அமைப்பு.  முறையான இன்வெஸ்டிகேஷனுக்கு பின்  எந்த ஒரு அரசு அதிகாரியின் மீதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடும் அதிகாரம் உண்டு. அதைப்போலவே கைது செய்யும் அதிகாரமும் உண்டு.

3.   லோக்பாலுக்கு காவல் துறைக்கு  இருப்பதை போலவே முதல் தகவல் அறிக்கையை  பதிவு செய்யவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அதிகாரம் உண்டு.

4. சி.பி.ஐ யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு லோக்பாலுடன் இணைக்கப்படும்.

5. பொய்யாக புகார் செய்தால் புகார்தாரருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமும் உண்டு.

6. லோக்பால் அமைப்புடன் சி.வி.சி-யும் இதர அரசின் விஜிலியன்ஸ் அமைப்புகளும் இணைக்கப்படும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் உண்டு.

7.  லோக்பால் அமைப்பில் 11 அங்கத்தினர் இருப்பார்கள். அதில் ஒருவர் தலைவர். இவர்களில் குறைந்த பட்சம் நான்கு அங்கத்தினராவது சட்ட அறிவு பெற்றவராக இருக்கவேண்டும். எஞ்சியவர்கள் எந்த துறையை சார்ந்தவராகவும் இருக்கலாம். 

 8. லோக்பால் அங்கத்தினர்களை தேர்வு செய்யும் கமிட்டியில் சட்ட பின்னனி உடையவர்கள், தலைமை தேர்தல் அதிகாரி, சி.ஏ.ஜி,  நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள், மேக்சேசே அவார்டு பெற்ற இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் போன்றவர்கள் பங்கேற்பார்கள். இவர்களின் தேர்வு வெளிப்படையானதாக இருக்கும்.     

9.  லோக்பால் வழக்கின் புலன் விசாரணையை ஒரு ஆண்டுக்குள் முடித்து, நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து அடுத்த ஒரு ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும்.

10. புகார்தாரகளுக்கு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வழி உண்டு.

11.  ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை குற்றவாளியிடமிருந்து ஈடாக்கும்.

12.  குற்றத்தின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு  ஐந்து ஆண்டு முதல் ஆயுட்கால தண்டனை வரை வழங்க இந்த சட்டம் வழி செய்யும்.

எங்களுக்கு நாங்களே ஆப்பு வைக்க நாங்கள் என்ன முட்டாள்களா? என்று கண்துடைப்பாக சட்டம் இயற்ற விரும்பும் அரசு - ஊழல் செய்பவன் எவனாக இருந்தாலும் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வரைவு மசோதாவை ஏற்கவேண்டும் என உறுதியாக இருக்கும் அன்னாஹசாரே தலைமையிலான மக்கள் இயக்கம். ஆக இந்த பிரச்சனை அவ்வளவு சுலபத்தில் முடிந்துவிட வாய்ப்பு இல்லை. 

மக்கள் இயக்கத்தின் வரைவு மசோதாவை ஏற்று அதை சட்டமாக்காத பட்சத்தில்,  மக்களின் காந்திய வழி கொந்தளிப்பு போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும்.

இதற்கிடையில் 92 வயதான "ஷாம்பு தத்தா" என்ற காந்தியவாதி (இந்தியன் தாத்தா) கழிந்த 15 ஆண்டுகளாக இந்த சட்டத்திற்காக போராடி வருகிறார். 11 ஆண்டுகளுக்கு முன் அனைத்து எம்பிகளுக்கும் கேள்வி-பதில் (Questionnaire)  வடிவில் தபால் கார்டில் எழுதி அனுப்பியிருந்தார். மன்மோகன் சிங் உட்பட 100 எம்பிக்கள் ஆதரவளித்து பதில் அனுப்பினர். ஆனால் பலனில்லை. இப்பொழுது இவரும் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இவர் ஆங்கிலேயர் காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் சேர்வதற்காக தன் வேலையை துறந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். இந்திரா காந்தியின் அவசரகால நிலை (எமெர்ஜென்ஸி) யின் போது கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்

0 கருத்துகள்: