கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. புது டெல்லியில் இன்று (மார்ச் 1) தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ் ஓய் குரேஷி பேட்டி அளித்த அளித்தார். பேட்டி விவரம்:

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். மேற்கு வங்காளத்தில் 6 கட்டங்களாக ஏப்ரல் 18, 23, 27 மற்றும் மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும்.
 
தமிழ்நாட்டில் இந்த மாதம் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கும். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 26. வேட்புமனு பரிசீலனை மார்ச் 28.வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 30. வாக்கு எண்ணிக்கை மே 13.


தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கும், இரண்டு தொகுதிகள் பழங்குடியினத்தவருக்கான ரிசர்வ் தொகுதிகளாகும். மொத்தம் 54,016 வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெறும். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 பேர்.
 
தமிழ்நாட்டில் 99.85 சதவீதம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை 100 சதவீத அளவிற்கு அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகைப்படம் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் அருகில் உள்ள தேர்தல் பதிவு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்திற்கு ஏப்ரல் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 5 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாகும். 851 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் வாக்குசாவடிக்கு அடையாள அட்டையுடன் சென்று வாக்குப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் விவரங்கள் அடையாள அட்டையை கொண்டு கணினி முறையில் சரிபார்க்கப்படும்.
 
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் ஆணையம் இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டு அந்த மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தேர்தலுக்கான திட்டத்தை தயாரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுடன் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துறை சார்ந்த அலுவலர்கள் ஆலோசனையுடன் இதற்கான திட்டம் தயாரிக்கப்படும். பதற்றம் உள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் போதிய அளவு வீடியோ மற்றும் டிஜிட்டல் கேமராக்களை முன்னேற்பாடாக செய்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மனுதாக்கல், மனு பரீசிலனை, தேர்தல் சின்னம் ஒதுக்கீடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்ட பரிசோதனை தயார்நிலை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரச்சாரம், தேர்தல் வாக்கு எண்ணிக்கை உட்பட அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் தேவைப்படுவோருக்கு சிடி-க்களாக கட்டண அடிப்படையில் வழங்கப்படும்.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நடத்தை நெறிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் நேரடியாக அவர்களுக்கான வாக்குச்சாவடி, வரிசை எண், வாக்காளர் பதிவு எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டை (பூத் சிலிப்) அளிப்பார்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் முக்கியமான நடவடிக்கையாகும்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: